ஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்; ராகுலை நம்பிக் களமிறங்கும் பஞ்சாப்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயணம் குறித்து பார்க்கலாம். இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19இல் துவங்கவுள்ளது. இதில் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மிகவும் உறுதியான அணியாகத் தெரிந்த போதும் அந்த அணி வெற்றியைவிட அதிகத் தோல்விகளைச் சந்தித்துள்ளது. இருந்தாலும் அந்த அணி தனது ரசிகர்களுக்குத் தங்களின் ஆட்டத்தால் உற்சாகம் அளிக்கத் தவறியதேயில்லை.
மோசமான சாதனைகள்
ஐபிஎல் அரங்கில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்குத் திணறும் அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. கடந்த 12 ஆண்டுகளில் 2008, 2014 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டுமே இந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அது மட்டுமல்ல. ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் மூன்று முறை கடைசி இடம் பிடித்துள்ளது பஞ்சாப் அணி. இதை விட டெல்லி அணி மட்டுமே அதிக முறை கடைசி இடம் பிடித்துள்ளது.
11 கேப்டன்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை அதிகபட்சமாக 11 கேப்டன்கள் வழிநடத்தியுள்ளனர். ஆனால் தொடக்கக் கட்டத்தில் இதன் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங் தலைமையில் மட்டுமே இந்த அணி ஓரளவு வெற்றி பெற்றது. இதற்கிடையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அணிகளில் வீரேந்திர சேவாக், கிலென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், கே.எல். ராகுல் எனப் பல அதிரடியான பேட்ஸ்மேன்களைக் கொண்ட அணியாகப் பஞ்சாப் அணி திகழ்கிறது. ஐபிஎல் அரங்கில் அதிக சதங்களை விளாசிய வீரர்களைக் கொண்ட இரண்டாவது அணி என்ற பெருமையும் பஞ்சாப் அணி வசம் உள்ளது. இந்த அணியின் வீரர்கள் மொத்தமாக 11 சதங்கள் விளாசியுள்ளனர். பவுலிங்கிலும் அதிக ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய அணி என்ற பெருமையும் பஞ்சாப் அணி பெற்றுள்ளது. இந்த அணி அதிகபட்சமாக இந்த தொடரில் 4 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளது.
ஹாட்ரிக்கில் விசித்திர சாதனை
2009இல் பெங்களூரு மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுக்கு எதிராக யுவராஜ் சிங் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். தொடர்ந்து 2016இல் குஜராத் லயன்ஸ் எதிராக அணிக்கு அக்ஷர் படேல் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். 2019இல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து வீரர் சாம் கரன் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். இப்படி அதிக முறை ஹாட்ரிக் வீழ்த்திய அணி என்ற பெருமை பெற்றிருந்தபோதும், அதிக முறை ஹாட்ரிக் விக்கெட் விட்டுக்கொடுத்த மோசமான சாதனையும் பஞ்சாப் அணி வசமே உள்ளது. பஞ்சாப் அணி ஐபிஎல் அரங்கில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டை இழந்துள்ளது.
ஹைதராபாத் என்னும் எமன்
அதே நேரம் ஐபிஎல் தொடரின் ஃபைனலில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பஞ்சாப் அணியின் விருத்திமான் சகா பெற்றார். ஆனால் கொல்கத்தா அணி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதில் சகாவின் சதம் வீணானது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகப் பஞ்சாப் அணி அதிகத் தோல்விகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்வது புரியாத புதிராகவே உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணியின் வெற்றி சதவீதம் 71.43ஆக உள்ளது.
நட்சத்திர வீரர்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைப் பொருத்தவரையில், அந்த அணியின் ஆல் இன் ஆல் அழகு ராஜாவான ராகுல் இம்முறை கேப்டனாகவும் களமிறங்குவதால் அவருக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. இவருடன் கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன், கிலென் மேக்ஸ்வெல் ஆகியோரும் அசத்துவார்கள் என நம்பப்படுகிறது. பந்து வீச்சைப் பொருத்தவரையில் புதிய வருகையான வெஸ்ட் இண்டீஸின் செல்டன் காட்ரல், கிறிஸ் ஜார்டன், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் அசத்த வாய்ப்பு உள்ளது. இளம் வீச்சாளர் ரவி பிஸ்னோய் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
நம்பிக்கை
பல சாதகமான விஷயங்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்தபோதும் சின்னச் சின்னச் சொதப்பல்களால் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. தனது முந்தைய பயணங்களில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இம்முறை சாதிக்கும் என நம்பப்படுகிறது.
பஞ்சாப் அணியின் போட்டிகள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments