ஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்; தட்டித் தூக்குவாரா தல தோனி?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாகக் கருதப்படுவது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. இதன் வெற்றிப் பயணம் குறித்து அலசலாம். இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 இல் துவங்கவுள்ளது. இதில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மிக நீண்ட இடைவேளைக்கு பின் தோனி களமிறங்குவதே ஆகும்.
சிறந்த தலைமை
ஐபிஎல் அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று கோப்பைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியில் சீனியர் வீரர்களாக இருப்பதைக் கண்டு பலரும் குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் அதை எல்லாம் தவிடுபொடியாக்கினர் சென்னை வீரர்கள். அனுபவ கேப்டனான தோனியின் சிறப்பான தலைமையில் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணி உச்சம் தொட்டது. தொடர் வெற்றிகளைப் பெற்று தற்போது வரை மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. தனது மிகச் சிறந்த ஆட்டத்தால் சென்னையில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் ரசிகர்களை தன்வசம் ஈர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசைக்க முடியாத கோட்டையாகவே திகழ்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணி குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம்.
அப்போது அதிகம்
கடந்த 2008 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரூ. 91 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கியது. முதல் தொடரில் அணி வீரர்களைத் தேர்வு செய்ததில் சிஎஸ்கே அணி தோனியை 15 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுத்தது. அப்போது அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமை பெற்றார் தோனி. * ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றிலேயே பங்கேற்ற 10 தொடர்களில் 8 முறை ஃபைனலுக்குத் தகுதி பெற்ற ஒரே அணி சிஎஸ்கேதான். பங்கேற்ற அனைத்துத் தொடர்களிலும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.
தல கெத்து
சிஎஸ்கே ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் கேப்டன் தோனி ஒருவர் மட்டும்தான் அடுத்தடுத்த ஐபிஎல் தொடர்களில் கோப்பை வென்ற ஒரே கேப்டன். 2010இல் சென்னை அணிக்குக் கோப்பை வென்று கொடுத்த தோனி, அடுத்த ஆண்டில் (2011) கோப்பையை தக்க வைத்தார். அதேபோல மொத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் ஒரே கேப்டன் வழிநடத்திய ஒரே அணி என்ற தனிப்பெருமை பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் அரங்கில் கடைசி ஓவரில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அதிக முறை வெற்றிகரமாக சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது சென்னை அணி. மொத்தமாக 6 முறை இந்த சாதனையைப் படைத்துள்ளது சிஎஸ்கே.
ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால் 2018இல் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று அந்த ஆண்டில் ஹைதராபாத் அணியை ஃபைனலில் வீழ்த்தி மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்று அசத்தியது.
கோட்டை சேப்பாக்கம்
சென்னை அணியின் வெற்றியின் பிண்ணனியில் சேப்பாக்க மைதானம் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்கிறது. இங்கு பங்கேற்ற போட்டிகளில் சென்னை அணியின் வெற்றி சதவீதம் 71.43ஆக உள்ளது. 2008இல் இதே சேப்பாக்க மைதானத்தில் தான் ஐபிஎல் அரங்கில் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை சென்னை வீரர் பாலாஜி கைப்பற்றினார். சென்னை அணி பங்கேற்ற 165 போட்டிகளில் 100 வெற்றிகள் பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் குறைந்த கேப்டன்கள் வழிநடத்திய அணி என்ற பெருமையும் சென்னை அணிக்கு உள்ளது. இதுவரை சென்னை அணியை வெறும் 2 கேப்டன்கள் மட்டுமே வழிநடத்தியுள்ளனர். இம்முறையும் தோனி மீண்டும் கோப்பை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
சின்ன தல சாதனை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா ஐபிஎல் அரங்கில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் (5368 ரன்கள்) இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் ரெய்னா (134 போட்டிகள்) தான். ஆனால் சொந்த காரணத்துக்காக ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காதது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே பங்கு பெறும் போட்டிகள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments