ஹைத்ராபாத்தில் ஐபிஎல்லை மையமாக வைத்து சூதாட்டம்; 730 கோடியை தாண்டும் என அதிர்ச்சி!!!
- IndiaGlitz, [Wednesday,October 07 2020]
அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போட்டிகளை மையமாக வைத்து இளைஞர்கள் சூதாட்டங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஹைத்ராபாத்தில் மட்டும் இதுவரை 730 கோடி ரூபாய் மதிப்பிலான சூதாட்டங்கள் நடைபெற்று இருக்கலாம் என ஹைத்ராபாத் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் சஜ்ஜார் குறிப்பிட்டு இருக்கிறார். இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து நடைபெறும் சூதாட்டங்களில் கலந்து கொள்வதற்காக பல இளைஞர்கள் கடன் வாங்குவதாவும் பெற்றோர்களின் பணத்தை திருடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் செல்போன், லேப்டாப் போன்ற பொருட்களை அடமானம் வைத்து இளைஞர்கள் சூதாட்டங்களில் கலந்து கொள்வதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்து உள்ளனர். இப்படி இளைஞர்களை வைத்து சூதாட்டத்தை நடத்துவதற்காக புதுப்புது செயலிகளும் உருவாக்கப்படுகின்றன என்று சைபர் கிரைம் தெரிவித்து உள்ளது.
மேலும் ஹைத்ராபாத்தில் உள்ள பஷீராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கும்பல் இதேபோன்ற சூதாட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். அந்தக் கும்பலின் தலைவன் சுஷாந்த் என்பவரை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 22.89 லட்சம் ரூபாய் கைப்பற்றி உள்ளனர். மேலும் சூதாட்டத்திற்காக உருவாக்கப்பட்ட செயலி மற்றும் செல்போன்களை போலீசார் முடக்கியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஐபில் தொடர்பான சூதாட்டங்களில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவர்களும் கலந்து கொள்வதாக ஹைத்ராபாத் சைபர் கிரைம் கவலை தெரிவித்து உள்ளது.