அவர் ரூ.200 கோடிக்கு ஏலம் போயிருப்பார்… வைரலாகும் பதிவிற்கு பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

உலக அளவில் முன்னணி வேகப்பந்து விச்சாளர் என்ற அடையாளத்துடன் அசுர வளர்ச்சி அடைந்துவருகிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி. இவரைப் பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்ட பதிவுதான் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகள் துவங்கப்பட்டபோது பாகிஸ்தானை சேர்ந்த ஷாஹித் அப்ரிடி மற்றும் ஹோயப் அக்தர் இருவரும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினர். அதற்குப் பிறகு வெளியுறவு பிரச்சனை காரணமாக பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலம் எடுப்பதையே தவிர்த்துவிட்டன.

இந்நிலையில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மட்டும் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால் ரூ.200 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருப்பார் என்று அந்நாட்டு பிரபல பத்திரிக்கையாளர் இஸ்திஷாம் உல் ஹக் என்பவர் குறிப்பிட்டு உள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும் உங்கள் கற்பனைக்கு அளவே இல்லையா? ஷாஹீன் அப்ரிடி திறமையான வீரர்தான். ஆனாலும் உங்களது கற்பனை மிகப்பெரிது எனக் கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர் ஐபிஎல் அணிகளின் ஏலத்தொகையே 90 கோடிதான் என்று பத்திரிக்கையாளர் இஸ்திஷாமை கேலி செய்துள்ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி கடந்த 2021 இல் 36 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மேலும் டி20 உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொண்டு அதிரடி காட்டிய இவர் இந்தியாவுடனான போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற முன்னணி வீரர்களையும் அவுட்டாக்கி திணறடித்தார். இந்தக் காரணத்திற்காகத்தான் இஸ்திஷாம் தற்போது அவரைத் தூக்கிக் கொண்டாடி வருகிறாரோ என்ற சந்தேகத்தையும் சிலர் இணையத்தில் எழுப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.