சிஎஸ்கே ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்பிரைஸ்… 2022 ஐபிஎல் ஸ்பெஷல்!
- IndiaGlitz, [Saturday,February 26 2022] Sports News
2022 ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சிஎஸ்கே இரண்டும்தான் பலமான எதிரிகளாகக் கருதப்படுகின்றன. ஏற்கனவே 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கேவுடன் மோதுவதைப் பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 2022வில் மும்பை மற்றும் சிஎஸ்கேவிற்காக பிசிசிஐ ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்திருக்கிறது.
2022 ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி துவங்கி அதன் இறுதிப்போட்டி வரும் மே 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மும்பை வான்கடே, டிஓய் பாட்டில், பர்போஸ் மைதானம், புனே மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அணிகள் மோதுவதற்காக பட்டியல் அட்டவணை வெளியாகி இருக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் இடம்பெறுவதால் அவை இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் கால்பந்தில் நடைபெறும் குலுக்கல் முறையைப் பின்பற்றாத பிசிசிஐ அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள், போட்டிகளில் வென்ற அணிகள் என்ற முறையில் சரிசமமான இரு குழுக்களைப் பிரித்திருக்கிறது.
அந்த வகையில் குரூப் ஏவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பியில் சிஎஸ்கே, ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
போட்டி நடைபெறும் முறை- இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் ரவுண்ட் ராபின் முறை தனது குரூப்பில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அடுத்து எதிரணியில் உள்ள ஒரு அணியுடன் 2 முறையும், மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் 14 லீக் போட்டிகளில் விளையாடும்.
மும்பை Vs சிஎஸ்கே- ஐபிஎல் 2022 விதிகளின்படி மும்பை, சிஎஸ்கே இரண்டும் எதிரணிகளில் இருப்பதால் அதிகமுறை மோதிக் கொள்ளாதோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கும். இங்குதான் பிசிசிஐ சிறப்பான ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி தனது குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை என 8 லீக் போட்டிகளில் விளையாடி விட்டு எதிரணியான சிஎஸ்கேவுடன் 2 முறை விளையாட வேண்டும். மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும் என்ற அடிப்படையில் அட்டவணை வகுத்திருக்கிறது.
இதனால் சிஎஸ்கே மற்றும் மும்பை இரு அணிகளுக்கும் இடையே பலமான போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள கொல்கத்தா அணி – ஐத்ராபாத் அணியுடன் 2 முறையும் பெங்களூரு அணி – ராஜஸ்தான் அணியுடன் 2 முறையும், டெல்லி- பஞ்சாப் அணியுடன் 2 முறையும் புதிய அணியான லக்னோ- மற்றொரு புதிய அணியான குஜராத் (அகமதாபாத்) அணியுடன் 2 முறையும் மோதவுள்ளன.