ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பெங்களூர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தோனிக்கு நல்ல பாடம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
துபாயில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44ஆவது லீக் போட்டியில் படுதோல்விகளை சந்தித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்றாவது இடத்தில் அமர்ந்திருந்த ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் உதானாவிற்கு பதிலாக மொயீன் அலி அணியில் சேர்க்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜாஸ் ஹசில்வுட், சார்துல் தாகூர் ஆகியோருக்கு பதிலாக மிட்சல் சாண்டனர், மோனு குமார் இடம்பிடித்தனர்.
சுமாரான துவக்கம்
இதையடுத்துக் களமிறங்கிய பெங்களூர் அணியின் ஆரோன் ஃபிஞ்ச்சை (15) சாம் கரன் வெளியேற்றினார். தேவ்தத் படிக்கல் (22) சாண்ட்னர் சுழலில் சிக்கினார். பின் இணைந்த கேப்டன் கோலி, டிவிலியர்ஸ் ஜோடி அணியைச் சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்களைச் சமாளித்தாலும் ரன் விகிதத்தை உயர்த்த முடியவில்லை.
அசத்தல் கேட்ச்
மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 82 ரன்கள் சேர்த்த நிலையில், டிவிலியர்ஸ் (39) சாஹர் வேகத்தில் டூ பிளஸியின் அசத்தலான கேட்ச்சில் வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி (1), கிறிஸ் மோரிஸ் (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். மறுபுறம் தனிஆளாகப் போராடிய கோலி (50) அரைசதம் கடந்து அவுட்டாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது.
கெய்க்வாட் மிரட்டல்
எட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கெய்க்வாட், டூ பிளஸி இம்முறை நல்ல அடித்தளம் அமைத்தனர். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்ச்சியை தவிர்த்த இந்த ஜோடி எதிர்பார்த்தது போலவே இந்தாண்டு தொடரில் முதல் 6 ஓவரில் நல்ல ஸ்கோரையும் எட்டியது. இதற்கிடையில் டூ பிளஸி (25) மோரிஸ் வேகத்தில் அவுட்டானார். பின் வந்த அம்பத்தி ராயுடு களமிறங்கியது முதலே அதிரடி காட்டினார்.
இன்ப அதிர்ச்சி
முதலில் மொயின் அலி பந்தில் ஒரு பவுண்டரி அடித்த ராயுடு, சாயினியின் அடுத்த ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி எனப் பறக்கவிட்டார். எதிர்முனையில் ராயுடுவுக்கு கொஞ்சமும் சளைக்காமல் கெய்க்வாடும் தன்பங்கிற்கு அதிரடி காட்ட சென்னை அணி இலக்கை வேகமாக நெருங்கியது. இதுவரை ஐபிஎல் தொடரில் சென்னையின் மந்தமான டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்த ரசிகர்களுக்கு இம்முறை இன்ப அதிர்ச்சியாகவே இவர்களின் பேட்டிங் அமைந்தது எனலாம்.
அதே வேகம்
இதற்கிடையில் சஹால் சுழலில் ராயுடு (39) வெளியேற, அடுத்து வந்த கேப்டன் தோனியும் ஸ்கோர் வேகத்தை சோர்வடைய விடாமல் மோரிஸ் வேகத்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார். சீரான இடைவேளையில் பவுண்டரிகள் விளாசிய கெய்வட் அரைசதம் கடந்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நான்காவது இடம்
இப்போட்டியில் அரைசதம் அடித்த இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக குறைந்த வயதில் முதல் அரைசதம் கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பட்டியலில் நான்காவது இடம் பிடித்தார். இவர் இம்மைல்கல்லை 23 வயது 268 நாட்களில் எட்டியுள்ளார். இப்பட்டியலில் முதலிடத்தில் சுரேஷ் ரெய்னா (21 வயது 148 நாட்கள், 2008), இரண்டாவது இடத்தில் சாம் கரன் (22 வயது, 142 நாட்கள், 2020) மூன்றாவது இடத்தில் பார்த்தீவ் படேல் (23 வயது 268 நாட்கள், 2008) உள்ளனர்.
நல்ல பாடம்
சென்னை சூப்பர் அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை கடந்த போட்டியிலும் இதே வரிசை தான் இருந்தது. ஆனால் கடந்த போட்டியில் தோல்வியடைந்தது. இம்முறை கடந்த போட்டியில் செய்த தவறை கெய்க்வாட் திருத்திக்கொண்டு மிகச்சிறப்பாகவும், அணியின் வெற்றிக்கு தேவையான ரன் வேகத்தையும் சரியாக கடைசிவரை கடைபிடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு நல்ல பாடமாக அமைந்தது எனலாம். அனுபவ உள்ள வீரர் சொதப்பினாலும் தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது. அனுபவம் இல்லை என்பதற்காக ஒரு போட்டியில் வாய்ப்பு அளித்துவிட்டு அடுத்த போட்டியில் இளம் வீரர்களை தூக்குவது (ஜகதீசன்) எனச் செயல்பட்ட தோனி இனியாவது தனது பழைய பார்முலாவில் இருந்து வெளிவர வேண்டும்.
கோலி 200
இப்போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலி, ஒரு சிக்சர் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது 200 ஆவது சிக்சரைப் பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரி அதிக சிக்சர்கள் விளாசிய மூன்றாவது இந்தியரானார் கோலி. முதலிடத்தில் தோனி (216 சிக்சர்கள்) உள்ளார். ரோஹித் ஷர்மா (209 சிக்சர்கள்) உள்ளார். ஒட்டு மொத்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் (336 சிக்சர்கள்) முதலிடத்திலும், டிவிலியர்ஸ் (231 சிக்சர்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளார்.
சுருக்கமான ஸ்கோர்:
பெங்களூர்: 145/6 (20 ஓவர்கள்)
சென்னை: 150/2 (18.4 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ருத்ராஜ் கெய்க்வாட்
Photo Courtesy : T20.com
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Diya Harini
Contact at support@indiaglitz.com