18 வயது இளைஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் ஐபோன்! ஒரு ஆச்சரிய தகவல்!
- IndiaGlitz, [Saturday,December 14 2019]
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்றால் அதை செல்போன் என்றே கூறலாம். செல்போன் போல் மிகவேகமாக அனைத்து மக்களிடம் போய் சென்றது வேறு எந்தப் பொருளும் இல்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. செல்போன்கள் பல நேரங்களில் பயன்களை கொடுத்தாலும் சில நேரம் அது தொந்தரவாக இருப்பதாகவும் சிலர் கூறுவதுண்டு. எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதிக பலன்களை கொடுத்தாலும் சில தொந்தரவு இருக்கத்தான் செய்யும் என்பது இயற்கையின் நியதி
இந்த நிலையில் 18 வயது இளைஞன் ஒருவரின் உயிரை ஆப்பிள் ஐபோன் ஒன்று காப்பாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோவா என்ற நகரை சேர்ந்த 18 வயது கெயில் என்ற இளைஞன் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் மிக அதிகமாக குளிர் பனி வீசிக்கொண்டிருந்தது. அதாவது 5 டிகிரி குளிர் இருந்ததாக தெரிகிறது
இந்த நிலையில் காரின் கண்ணாடியில் பனி படர்ந்ததை அடுத்து அவருக்கு சாலை சரியாக தெரியவில்லை. இதனால் அருகிலுள்ள பனிக்கட்டி மீது அவருடைய கார் திடீரென மோதி, கார் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள ஆற்றில் விழுந்தது. இந்த நிலையில் ஆற்றில் உள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக காருக்குள் புக ஆரம்பித்தது
இந்த நேரத்தில் அந்த இளைஞன் பதட்டம் அடைந்தாலும் சட்டென புத்திசாலித்தனமாக செயல்பட்டு தனது ஆப்பிள் ஐபோனில் உள்ள ‘சிரி’ என்ற செயலியை ஓபன் செய்து 911 கால் செய்யவும் என்று கூறியுள்ளார். உடனடியாக சிரி செயலி 911க்கு கால் செய்ய, அதன் மூலம் மீட்புப் படையினரை தொடர்பு கொண்ட கெயில், தான் ஆபத்தில் இருப்பதாக கூறி, தான் சிக்கிய இடத்தையும் கூறியுள்ளார். உடனே மீட்பு படையினர் அவர் கூறிய இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டனர்
இதுகுறித்து கெயில் கூறியபோது காரின் உள்ளே தண்ணீர் வந்ததும் நான் பதட்டமடைந்தேன். அவ்வளவு குளிரான தண்ணீரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. உடனடியாக சிரி செயலி ஞாபகம் வந்ததால் அதன் மூலம் 911ல்நடந்ததைக் கூறினேன். அவர்களும் சரியான நேரத்தில் வந்து என்னை காப்பாற்றினார்கள் என்று கூறியுள்ளார். சரியான நேரத்தில் அவர் தனது ஆப்பிள் ஐபோனை பயன்படுத்தாவிட்டால் அவர் உயிரிழந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது