களையிழந்த கோடம்பாக்கம்!!! கொண்டாட்டத்தில் இணையத் திரைகள்!!!

  • IndiaGlitz, [Friday,April 03 2020]

 

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக உலகமே முடங்கிடக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள சினிமாத்துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. நமது கோடம்பாக்கமும் தனது புதிய படங்கள் பற்றிய அறிவிப்பை நிறுத்தி வைத்திருக்கிறது. திரையில் ஓடிக்கொண்டிருந்த படங்களின் நிலைமை, அதன் வசூல் குறித்த எந்த தகவலையும் தெரிந்துகொள்ளவும் முடியவில்லை. இந்நிலையில் கொரோனா முடிவுக்கு வரும்போதும் சினிமாத்துறை மேலும், மோசமான பாதிப்புகளைத்தான் சந்திக்கப்போகிறது எனப் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

காரணம், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ‘வால்டர்’ போன்ற படங்கள் தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. திரையரங்குகள் திறக்கப்படும் பட்சத்தில் இந்தப் படங்களை எடுத்துவிடக்கூடாது எனத் திரைப்படக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஊரடங்கு உத்தரவு தடை நீக்கப்பட்டாலும் திரையரங்குகள் உடனடியாகத் திறக்கப்படாது. எனவே திரையரங்குகள் இயல்பான நிலைமைக்கு திரும்ப குறைந்த பட்சம் 2 மாதங்கள் பிடிக்கலாம். அதுவும் திறக்கப்பட்ட உடனே மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்பதும் அடுத்த சந்தேகம்.

திரையரங்குகள் திறக்கப்பட்டு ஓரளவு கூட்டம் வரும்வரையில் பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வராது. மாஸ்டர், சூரரைப்போற்றி, வாய்மை, அண்ணாத்த, பூமி போன்ற படங்கள் முக்கிய நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்டு இருக்கின்றன. இவையனைத்தும் ஒரே நேரத்தில் வெளிவரும்பட்சத்தில் கடுமையான போட்டி நிலவுவதற்கு வாய்ப்பு இருப்பதுடன் வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சமும் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். திரைக்கு வராத படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்போது பாதி படப்பிடிப்பு முடிந்த பல படங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. அதன் வெளியீட்டு தேதிகளும் தள்ளிப்போவதற்கு அதிக வாய்ப்புகள் அதிகம்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில்தான் திரைத்துறை, வசூல் வேட்டையை நடத்தி அதிக பணத்தைச் சம்பாத்திக்க முடியும். இந்நிலையில் இயல்புநிலை திரும்பி மக்கள் அவர்களது வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டால் திரைத்துறையின் நிலைமை கேள்விகுறிதான். அடுத்து படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் படங்கள் தங்களது வேலையைத் தொடங்கும்போது அவர்களும் கால்ஷீட் போன்ற பிரச்சனையை சமாளிக்க வேண்டிவரும். கொரோனா தந்திருக்கும் பெரிய இடைவெளியில் தயாரிப்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். போட்ட பணத்தை எடுக்கமுடியாமலும், வாங்கிய கடனுக்கு தேவையில்லாமல் வட்டி செலுத்த வேண்டிய நிலைமையும் கூடுதல் சுமையை தரக்கூடும்.

வெள்ளித்திரை இப்படி சுமையில் மாட்டிக் கொண்டிருக்கும்போது, தொலைக்காட்சிகளும் கொரோனா ஊரடங்கிற்காக வீடுகளில் இருப்பவர்களை சமாளிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. சக்திமான், இராமாயணம் முதற்கொண்டு மக்களால் விரும்பப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளை தூசித்தட்டி காட்சிப்படுத்தி வருகின்றனர். மேலும், மக்களை தங்களது நிகழ்ச்சியைப் பார்க்க வைப்பதற்காக ஹிட் அடித்தப் படங்களை கொடுக்க வேண்டிய அவசியத்திலும் தொலைக்காட்சிகள் மாட்டிக்கொண்டு விட்டன. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதால் சின்னதிரையில் படுவேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பல நெடுந்தொடர்களும் இடையில் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

தொலைக்காட்சியைத் தாண்டி இன்னொரு பக்கம் டிக் டாக், Share chare போன்ற செயலிகள் தற்போது இளைஞர்கள் மத்தியில் களைக்கட்டி வருகின்றன. கொரோனா ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் தற்போது இணையத்தை பயன்படுத்தும் விகிதம் 70% அதிகரித்து இருக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தங்களது போன்களில் மூழ்கியிருக்கின்றனர். இதனால் இணையத்தின் வேகம் குறைந்துவிட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில் Netflix, Amazon Prime, Hotstar போன்ற இணையங்களைப் பயன்படுத்தி படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வெள்ளித்திரைகள் இழந்த இடத்தை இணையத் திரைகள் ஆக்கிரமித்து வருகின்றன. இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அளவும் அதிகரித்து விட்டதால் உபரி டேட்டாவிற்காக ஸ்மாட் பைட்களை விற்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சம்பாதித்து வருகின்றன.

தற்போது ஏற்பட்டிருக்கும் இடைவெளியை வெள்ளித்திரை எப்படி கடந்துவரும், நிலைமையை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது எல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயங்கள். ஆனால், உயிருக்கு முன் இவையெல்லாம் ஒன்றுமில்லை என்பதுதான் அனைவரின் மனதிலும் ஓடிக்குகொண்டிருக்கும் மந்திரங்களாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.