போர் நேரத்தில் உக்ரைனுக்கு கைக்கொடுத்த எலான் மஸ்க்!
- IndiaGlitz, [Monday,February 28 2022]
ரஷ்யா உக்ரைனில் இரணுவ நடவடிக்கையை ஆரம்பித்து 5 நாட்களை கடந்திருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் இணைய வசதிகள் முடக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் உக்ரைனுக்கு தனது நிறுவனம் அனுப்பிய செயற்கைகோள் மூலம் இணையவசதியை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளார் எலான் மஸ்க்.
உக்ரைனில் ரஷ்யா கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக அந்நாட்டு இராணுவம் நடப்பு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும். இதனால் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைக்கு முடிவு எட்டிவிடலாம் என்று ரஷ்ய அதிபர் புடின் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் எங்கள் நாட்டின் உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அசராமல் உக்ரைன் நாட்டு அதிபரும் அந்நாட்டு மக்களும் தங்களது கைகளில் ஆயுதத்தை ஏந்தியுள்ளனர்.
இதனால் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிக்கு வரும் ரஷ்யாவின் போர் வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இந்நிலையில் உக்ரைனின் ஆயுதப்படைகளை மட்டுமே தாக்கி அழிக்கிறோம் எனச் சொல்லிக்கொண்டிருந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என கண்ணுக்கு எட்டிய இடங்களில் எல்லாம் தற்போது வெடிகுண்டுகளை வீசி வருகிறது. இந்தத் தாக்குதல்களால் நேற்று காலை வரை 210 அப்பாவிகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் 1,100 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் உக்ரைன் நாட்டு உயர் அதிகாரி லியுட்மிலா தெரிவித்துள்ளார்.
இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைன் நாட்டு இணைய வசதிகள் சேதப்படுத்தப் படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே உக்ரைனுக்கு “ஸ்டார்லிங்“ செய்கைகோள் மூலம் இணைய வசதியுடன் முனையங்கள் அமைப்புத் தருமாறு அந்நாட்டு துணை பிரதமர் மைகைலோ பெடரோவ் எலான் மஸ்க்கிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளிற்கு செவிசாய்த்த எலான் மஸ்க் ஸ்டார்லிங் செய்கைகோள் மூலம் இணைய வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டதாகத் தற்போது அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும் முனையங்கள் நிறுவித் தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்X நிறுவனம் பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை நிறுவி வைத்திருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அது காண்ணாடி இழை இல்லாமல் அகண்ட அலைவரிசை இணைய வசதியையும் அளித்து வருகிறது. தற்போது உக்ரைனுக்கும் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையவசதியை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.