close
Choose your channels

பெண் எனும் மகா சக்தி; இந்தியாவில் பெண்களின் சமத்துவம்; சர்வதேச மகளிர் தினம்

Saturday, March 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

"பெண்கள் எல்லாம் முன்னேறிவிட்டார்கள்!!! பெண் அடிமைத் தனம் என்பது அறவே இல்லை" என்று பொதுவாகச் சொல்லப்படுவதும் உண்டு. பெண்கள் விஞ்ஞானிகளாக, அறிஞர்களாக, மருத்துவர்களாக, விமானம் ஓட்டுநர்களாக, தத்துவப் பேராசிரியர்களாக, இராணுவப் படை ஆளுமைகளாக இப்படி பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். இத்தனை சாதனைகளையும் வைத்துக்கொண்டு பெண்களின் சமத்துவம் பற்றி இனியும் பேச வேண்டுமா? என்று கூட கேட்கப் பட்டு வருகிறது. உண்மையில் பெண் சமத்துவம் பற்றி ஏன் பேச வேண்டும்? பெண் சமத்துவம் என்றால் என்ன? உண்மையில் பெண் சமத்துவத்தை இந்த உலகம் அனுபவித்து வருகிறதா??? எனப் பல கேள்விகளைப் புறக்கணித்து விட்டுத்தான் ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகிறோம்.

"ஒரு பெண் 12 மணிக்கு உடல் முழுக்க நகைகளைப் போட்டுக் கொண்டு பத்திரமாகச் சென்று, மீண்டு வர முடியும் என்றால் அந்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தம்" என காந்தியடிகள் ஒரு முறை பெண்களின் பாதுகாப்பை பற்றி பேசியிருந்தார். இன்றைக்கு பெண்கள் 12 மணிக்கு வெளியே பத்திரமாகச் சென்று மீண்டு வர முடியும். ஆனால் எல்லாப் பெண்களும் அப்படி சென்று மீண்டு வர முடியுமா? என்பதே கேள்வி. எப்படி எல்லா இடங்களிலும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறதோ அதேபோல, ஒரு சில துறைகளில் மட்டும் பெண்கள் சாதிப்பதை வைத்துக்கொண்டு பெண்கள் முன்னேறிவிட்டார்கள், நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள், பெண்கள் சமத்துவத்தை அனுபவித்து வருகிறார்கள் எனப் பொதுவான தகவல்களை உலகம் நம்புவது எத்தனை மடத்தனம்??? என்று இப்போது புரிந்திருக்கலாம்.

எல்லா காலங்களிலும் பெண்கள் இதே போல இரண்டாம் தர மனுஷிகளாக இல்லை என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு காலத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடுகளே இல்லாத சமூகமும் இருந்திருக்கிறது.

தாய் வழிச் சமூகம்

ஒரு காலத்தில் தாய்வழிச் சமூகம் என்ற ஒரு சமூக நடைமுறை இருந்தது. இச்சமூகத்தில் திருமணம் செய்து கொண்ட பெண்கள் யாரும் கணவன் வீட்டுக்குப் போக வேண்டியதில்லை. அதாவது ஒருபோதும் பெண்கள் உடைமை (உரிமை) பொருளாக இல்லாமல் சுதந்திரமான சிந்தனை உடையவர்களாக இருந்தார்கள். ஒட்டு மொத்த பொருளாதாரமும் அவர்களின் கைகளில் தான் இருந்தது. ஒரு குழந்தையின் தந்தைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதோ, அவ்வளவு முக்கியத்துவம் தாய்க்கும் கொடுக்கப் பட்டது. சொத்தில் முழுமையான உரிமை இருக்கும்போது பெண்கள் அச்சமூகத்தில் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கு கொள்வதற்கான உரிமைகளைப் பெற்றிருந்தார்கள்.

காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்று பொதுவாக ஒரு வாக்கியம் சொல்லப்படுவது உண்டு. இங்கு காலத்தின் கட்டாயம் ஒன்றும் இல்லை. பெரிய பெரிய அரசுகள், வேந்தர்கள் தோன்றினார்கள். நாட்டில் வீரத்திற்கு மதிப்பு கிடைக்கிறது. வீரம் தேவைப்படும் ஒன்றாக மாறிப்போகிற சமூகத்தில் பெண்கள் இரண்டாம் தர மனுஷிகளாக மாற்றப் படுகிறார்கள். இப்படித்தான் உலகத்தில் பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள். படிப்படியாக பெண்கள் வீட்டிற்குள்ளே முடங்கிப் போகிறார்கள். இதற்கு இனப்பெருக்கமும் ஏதோ பெரிய காரணமாக சொல்லப் படுகிறது. மனித இனம் தோன்றியதில் இருந்து பெண்கள் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் வீடுகளில் முடக்கப் பட்டது சில நூறு வருடங்களாகத் தான் என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.

பெண் எனும் சக்தி

பெண் என்றால் ஒரு பக்கம் அன்பானவர்கள், அமைதியானவர்கள், அடக்கமானவர்கள், பண்பானவர்கள் இன்னும் எத்தனையோ கள்… இன்னொரு பக்கம் காளி, சக்தி, வீரி, சூரி என்று மெகா சீரியலில் வரும் பெரிய மகா சக்திகள். ஆனால் உண்மையில் பெண் என்பவள் யார்? அவளுக்கு கிடைத்திருக்கும் சமத்துவம் எந்த அளவிற்கு உண்மை? எங்கே அவள் தோற்று போகிறாள்? இன்னொரு பக்கம் எதற்கு சிறப்பிக்கப் படுகிறாள்? என்பதை எல்லாம் உற்று நோக்க வேண்டி இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் பெண்களின் பெயர்களில் தான் அமைந்திருக்கின்றன. கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என்று. அன்புக்கு பாத்திரமானவர்கள் யார் என்றால் பெண்கள்தான். சரி ஆண்களுக்கு அன்பே இல்லையா??? என்றால் ஆண்களை விட பெண்கள் தான் அன்பானவர்கள் என்ற கருத்து பொதுப்படையாக சொல்லப் படுகிறது. அன்பானவர்கள் பொறுமையாக இருப்பார்கள். பொறுமையின் சிகரமான பெண்கள் அன்பான குழந்தைகளைப் பெற்று பொறுப்பாக வளர்த்து நாட்டிற்கு கொடுப்பார்கள். இந்த கருத்துகள் எப்படி பெண்ணிற்கு உரியதாக மாறிபோனது? இதற்கும் உறுதியாக நமது அரசுகளின் தோற்றமே காரணமாக இருந்தது. வீரம் கொண்டாடப் பட்ட நிலையில் தாய்மை பெண்ணுக்குரிய பிரதான கடமையாக மாறிபோனது.

சர்வதேசப் பெண்கள் தினம்

பெண்கள் தினம் இப்போது கொண்டாட்டமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது. அப்படியான மகளிர் தினம் அதன் முழுமை பயனை பெற்று விட்டதா? இதன் வரலாறுகளைத் தெரிந்து கொள்ள வேண்டியதும் முக்கியமான அம்சமாகும். பெண்களுக்கான சமூக நீதியை பெறுவதற்கு உலகம் முழுவதும் உள்ள பெண்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் போராடியே வந்திருக்கிறார்கள். சம ஊதியம் பெறுவதற்கு, ஓட்டுப் போதுவதற்கு, குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு, கருகலைப்பு செய்து கொள்வதற்கு எனப் போராட்டங்கள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

சவுதியில் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் தற்போதுதான் கார் ஓட்டுவது, தனியே வெளியே செல்வது, விளையாடுவது என குறைந்த பட்சம் உரிமையை பெற்று வருகிறார்கள். இதை உரிமை என்று கூட சொல்ல முடியாது. மறுக்கப் பட்ட இயல்பு வாழ்க்கை என்று தான் சொல்ல வேண்டும். சவுதி மத அடிப்படைகளைக் கொண்ட நாடு, எனவே இத்தனை கட்டுப்பாடுகள் என்று கூட பேச்சுவார்த்தை அடிபடலாம். வளர்ந்து விட்ட குடியரசு நாடான இந்தியாவில் ஒரு கோவிலுக்குச் செல்ல பெண்கள் அனுமதி கேட்டுப் போராடி வரும் நிலைமையும் இருக்கத்தான் செய்கிறது. வளர்ந்த, வளர்ந்து விட்ட, வளரும் என அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கான இயல்பு வாழ்க்கை ஏதோ நிலையில் இன்றைக்கும் மறுக்கப்படுவதும் அதற்கெதிராகப் பெண்கள் போராடுவதும் தொடந்து வாடிக்கையாகவே இருக்கிறது.

இப்படியான போராட்டங்களை நினைவுப் படுத்திக் கொள்ளவும், பெண்களின் சம வாய்ப்பினை நோக்கி நகர்ந்து செல்லவும் தான் சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப் படுகிறது. எந்த உரிமையையும் பெண்கள் போராடாமல் பெற்றதாகச் சரித்திரமே இல்லை. பாரிஸில் 1789 இல் தோன்றிய முதல் போராட்டம் தொடங்கி பெண்கள் தொடர்ந்து தங்களது உரிமைகளுக்காகப் போராடியே வருகின்றனர். அப்படியான ஒரு போராட்டத்தைத் தான் இன்று சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். 1910 வாக்கில் அமெரிக்கா தொழிற்சாலைகளில் 14 மணிநேர வேலையில் மாட்டிக்கொண்ட பெண்களின் உழைப்புக்குப் பின்னால் அவர்களது உடல் மீதான வன்முறைகளும் நடத்தப் பட்டன. வாரம் முழுவதும் 3 டாலருக்கு 81 மணிநேரம் வேலை பார்த்தனர். ஆண்களுக்கு தொழிற்சங்கங்கள் அமைத்துக் கொள்ள தொழிற்சாலைகள் அனுமதித்த போது பெண்கள் தங்கள் உரிமைகளை கேட்கக் கூட வாய்ப்பில்லாமல் அவதிப்பட்டனர். உரிமைகளை கேட்டால் ஒழுக்கம் கெட்டவள் என்று முத்திரைக் குத்தப் பட்டு அசிங்கப்படுத்தப் பட்டனர். இந்த நிலைமையில் தான் அமெரிக்காவின் மான்ஹெட்டன் நகரில் மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் ஒன்றாக கூடி பெரும் போராட்டத்தைத் தொடங்கினர்.

மார்ச் 8 இல் நடந்த பெண்களின் எழுச்சியை நினைவுபடுத்தும் விதமாக சர்வதேச பொதுவுடைமை இயக்க தலைவர் கிளாரா ஜெட்கின் இந்தத் தினத்தை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப் பட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த தீர்மானம் தான் 1975 இல் ஐ.நா. சபையினரால் ஒப்புக் கொள்ளப் பட்டு உலகம் முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

1911 லும் பெரிய போராட்டத்தைப் பெண்கள் சந்தித்தனர். அமெரிக்காவின் ட்ராயாங்கில் மார்ச் 25 ஆம் தேதி ஒரு தொழிற்சாலையின் மேற்கூரை தீப்பிடித்து எரிகிறது. ஆனால் வெளிப்புறமாக செல்வதற்கான கதவுகள் மூடப்பட்டு உள்ளுக்குளேயே 146 பெண்கள் தீக்கிரையாகி கருகினர். இது உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்துகிறது. அப்போது எழுந்த கிளர்ச்சியில் தான் ஒரு நாளைக்கு வேலை நேரம் என்பது 8 மணி நேரமாக குறைக்கப் படுகிறது. பத்தொன்பதுகளின் தொடக்கங்களில் பெண்களுக்கு ஊதியம், வேலை நேரம், பாதுகாப்பு வசதிகள், கழிப்பிட வசதிகள் என எந்த ஒழுங்குமுறையும் இல்லாமலே உலகம் முழுவதும் காணப்பட்டது. இத்தகைய வேறுபாட்டை களைவதற்கு பெண்கள் எடுத்த முயற்சிகளும் கொஞ்சம் நஞ்சமல்ல என்பதை மறந்துவிட முடியாது.

இத்தனை போராட்டங்களை கடந்து தான் இன்றைக்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது. பெண்களின் சம வாய்ப்புக்காகவும் இயல்பான வாழ்வியல் நிலைமைகளை வென்றெடுக்கவும் கொண்டாடப் படுகிற ஒரு அற்புதமான போராட்ட நாளை நாம் வெறுமனே ஒரு கொண்டாட்டமாக மாற்றி வைத்திருக்கிறோம். இதுதான் கொடுமையிலும் கொடுமை. கோலப்போட்டி, பாட்டுப்போட்டி, சமையல் போட்டி, ஒரே நிறத்திலான ஆடை என குறுகிவிட்ட மகளிர் தினத்தில் கூட இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பார்கள் என்பதை துளியும் மறந்து விடக் கூடாது.

இந்தியாவில் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 3:1% பெண்கள் வேலைக்குச் செல்வதாக உலக வங்கி தெரிவிக்கிறது. ஆனாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியப் பெண்களின் பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கிறது. இதிலும் பெரும்பாலான பெண்கள் வெறுமனே பொருளாதார தேவைகளுக்காக மட்டுமே வேலைக்கு செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

சதி, வரதட்சணை, பாலியல் வன்கொடுமை என இந்தியாவில் தொடருக்கின்ற போராட்டங்கள் ஒன்றும் சளைத்தவை இல்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கேரளாவில் பெண்கள் தங்களது மார்பகங்களை மறைத்துக் கொள்ளக் கூட உரிமை மறுக்கப்பட்டு இருந்தனர். தோல் சீலைப் போராட்டம் என்று பெரும் அளவிற்கு போராட்டங்கள் கிளம்பிய பின்னரே பெண்கள் தங்களது உடம்பை மறைத்துக் கொள்ள முடிந்தது.

ஒரு நூற்றாண்டு முன்னர் நடந்த வரலாற்றை விட்டு விடுவோம். சென்ற 2012 இல் நிர்பயா என்ற மருத்தவ மாணவி ஓடுகின்ற பேருந்தில் வன்கொடுமை செய்யப் பட்டதால் இறந்துபோனார். அந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு வழங்கப் பட்ட தண்டனை கூட இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்திய நீதிமன்றங்களில் பாலியல் குறித்த வழக்குகளில் குற்றங்கள் நிரூபிப்பதே இன்றைக்கு வரைக்கும் கடினமாகத்தான் இருக்கிறது. நீதிமன்றங்களின் விசாரணைகளுக்கு பயந்து பல லட்ச கணக்கான பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகிற அவலங்களும் தொடரத்தான் செய்கின்றன.

கதுவா பாலியல் வன்கொடுமை, உன்னாவ் வன்புணர்வு வழக்கு, நிர்பயா வழக்கு ஏன் தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்குகள் என பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அவிழ்த்துவிடப் பட்டு கொண்டே இருக்கின்றன. இதற்கு காரணங்களையும் பெண்களின் மீதே சுமத்தி விடுபவர்களும் உண்டு. பெண்கள் ஆண்களைவிட வலிமை குறைந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நடக்கும் அவலங்களையும் கொடுமைகளையும் எந்தக் கணக்கில் வைத்து பார்ப்பது.

உலகம் முழுவதிலும் பாலியல் வன்கொடுமை செய்யப் படும் விழுக்காட்டில் இந்தியா 6 ஆவது இடத்தில் இருக்கிறது. #MeToo# விவகாரத்தில் ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிகழ்வும் நடந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இதில் எங்கே இருக்கிறது ஆண்/பெண் சமத்துவம்? வேலைக்கு போவது, நாகரிகமான உடை அணிந்து கொள்வது என்றும் சிலர் தவறாக நினைத்து விடுகின்றனர். உண்மையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தாத ஒரு நாடு எப்படி வளமான நாடாக இருக்க முடியும்?

பேச்சுரிமை, கல்வி, வேலை, சம ஊதியம், சொத்தில் உரிமை, குடும்பத்தில் சம மரியாதை, பொது இடங்களில் பாதுகாப்பு என அனைத்தையும் வைத்துத் தான் பெண்களின் சமவாய்ப்பை பற்றி அளவிட வேண்டும். பெண்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் தங்களது வெற்றியை நோக்கி நகர்ந்து வருகின்றனர் என்பதும் உண்மைதான். அந்த குறிப்பிட்ட சதவீதப் பெண்களும் தங்களது இயல்பான வாழ்க்கையை வாழ இந்தச் சமூகம் அனுமதித்து இருக்கிறதா என்பதும் உறுதிச் செய்யபடாத ஒன்று. அப்படி இருக்கையில் மற்ற பெண்களின் நிலைமை???

தொழிற்சாலை, அரசியலில் இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து கேள்விக் கேட்டுவிடலாம். ஆனால் பெண்கள் மீதான ஆண்களின் அதிகாரத்தை கேள்வி கேட்டு, போராட்டம் செய்து ஒரு நொடியில் வரவழைக்க முடியாது என்பதே நிதர்சனம். தனது கணவரைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொண்ட இதே சமூகத்தில் (சங்ககால திருமணம்) தன்னுடைய மகள் சாதி மாற்றி திருமணம் செய்து கொண்டாள் என்பதற்காக வெட்டி கொலை செய்யப் படும் அவலங்களும் நடக்கின்றன.

மனிதம் என்பது மறைந்து இங்கு எல்லாவற்றிலும் அதிகாரம் தலைக்கேறிய அவலத்தில் இருக்கிறோம். ஆண்/ பெண் என் பாகுபாட்டை அல்லது சிந்தனையை மறந்து இயல்பான வாழ்க்கையினை வாழ்வதற்கு இன்னும் ஒரு கோடி தூரம் பயணித்தால் மட்டுமே சாத்தியமாகும் ஒன்று. அப்படியான ஒரு பயணத்தில் எதிர் பாலினத்தின் சிந்தனையில் பெண்ணை பற்றிய மதிப்பீட்டை மாற்றி அமைக்க வேண்டிய முக்கிய கடமையும் நமக்கு இருக்கிறது. பெண்மையை போற்ற வேண்டாம், பெண்மையை சம மனஷியாக மதிக்கும் சமூகத்தை நோக்கி நடை போடுவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment