உலக இடதுகையாளர்கள் தினத்தை அடுத்து தமிழ் இயக்குனரின் நெகிழ்ச்சியான பதிவு

  • IndiaGlitz, [Thursday,August 13 2020]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ஆம் தேதி உலகம் முழுவதும் இடது கையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது,. அன்றைய தினம் இடதுகை பழக்கம் உடையவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதுண்டு.

இந்த நிலையில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ படத்தை இயக்கி வருபவருமான இயக்குனர் ரவிகுமார், தானும் ஒரு இடது கை பழக்கம் உடையவர் என்று குறிப்பிட்டு ஒரு நெகிழ்ச்சியான பதிவை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று உலக இடது கையாளர்கள் தினமாம். எதேனும் வேலை செய்துகொண்டிருக்கையில் அருகில் இருப்பவர்கள் ஆச்சரியமாக “நீங்க லெப்ட் ஹேண்டா... “என்று கேட்கையில் நான் இடதுகைபழக்கம் உள்ளவன் என்பதை நினைவிட்டுகொள்வேன். ஆம் நானும் ஒரு இடது கையாளன்தான்.

இந்திய தமிழ்நாட்டு இடதுகையாளர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் உலக இடதுகையாளர்களுக்கே இருக்காது என்று நம்புகிறேன். ஏனென்றால் இருக்கும் இருகைகளில் இடது கையை தாழ்வாக பார்க்கும் மனநிலை நம்ம ஊரில்தான் இருக்கிறது. இதுபற்றி பண்டைய இலக்கியங்களில் குறிப்பு இருந்தால் சொல்லுங்கள். குறள் கூட ஒன்றும் இல்லை. வருத்தம்தான்.

உணவை இடதுகையால் எடுத்து சாப்பிடும்போதும், பென்சிலை இடது கையால் எடுத்து கிறுக்கும்போதும் அந்த கையில் அடித்து,அடித்து வலதுகைக்கு மாற்றி இளம்பிராயத்திலேயே மூளையை குழப்பிவிடுகிறார்கள். எனக்கும் அதுதான் நடந்தது. இவன் இடதுகைக்காரன் இவனை அப்படியே வளரவிடவேண்டும் என்ற எண்ணம் அப்போது இல்லை. இப்பொழுது கொஞ்சம் புரிதல் ஏற்பட்டிருப்பதாக பார்க்கிறேன். அந்த கரிசனம்கூட இடதுகைக்காரர்கள் ஏதோ பிறப்பிலேயே திறமைசாலிகள் என்ற போலியான எண்ணம் நிலவுவதன் காரணமாத்தான்.

பந்தியில் உணவு பரிமாறும் போது வலதுகையால்தான் உணவு போடவேண்டும் என்று வறுத்தெடுத்து வலதுகையால் ஊற்ற வைப்பார்கள் குறிதவறாமல் இலையில் ஊற்றுவது சாகசம். ஸ்கூல் டைம்ல வலதுகைக்காரர்களுக்கு ஏற்றவாறு லெக் சைடு கிரிக்கெட் விளையாடும்போது எனக்கு எப்பவுமே ஆஃப் சைட் விளையாடவேண்டிய அவஸ்தைதான். இப்படியே சொல்ல ஏராளம்... இறுதியாக ஒன்றை சொல்ல வேண்டுமன்றால் இடதுகைக்காரர்கள் இரண்டுகைகளையும் ஒன்றுபோல் பாவிக்கும் சமத்துவக்காரர்கள்.