ஆண்களை க்ளீன் போல்டாக மாற்றும் “லவ்“… இந்தக் காதல் பித்துக்கு காரணம் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,July 08 2021]

ஒரு பெண் காதலிப்பதை விட, ஒரு ஆண் காதலில் விழுந்துவிட்டால் அவர் செய்யும் சேட்டையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு அந்தரத்தில் பறக்கத் துவங்கி விடுவார். நடை, உடை, பாவனை ஏன் சில சமயங்களில் எண்ணங்கள் கூட மாறிவிடும். இதைத்தவிர தன் காதல்தான் உலகத்திலேயே பெரிய விஷயம் என்றும் பிதற்றத் துவங்கி விடுவார்.

அதோடு பொதுவெளியில் அந்த ஆண் காட்டும் பந்தாவிற்கு அளவே இருக்காது. காதலிப்பதற்கு முன்பு பொட்டிப்பாம்பாக இருந்த ஒரு நபர் காதலி கண் அசைத்துவிட்டால் போதும், பேட்டை ரவுடியாக மாறிவிடும் அதிசயமும் நம்ம ஊரில் நடக்கத்தான் செய்கிறது. இத்தனை மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை குறித்து ஒரு ஆய்வு விளக்கி இருக்கிறது.

அதாவது ஒரு ஆண் காதலில் விழும்போது அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் விதமாக சில விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பொதுவாக காதலிக்கும் ஆண்கள் தன்னுடைய காதலைச் சந்தேகப் படுவதே இல்லையாம். மேலும் அவருடைய காதலி செய்யும் அனைத்து செயல்களையும் அவர் ரசிக்க ஆரம்பித்து விடுவாராம்.

இதற்கு காரணம் ஒரு ஆண் காதலிக்கும்போது அவரது மூளையில் ஃபீனைலெத்திலமீன் எனும் வேதிப்பொருள் அதிகப்படியாகச் சுரந்து இதுபோன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறதாம். மேலும் இந்த உணர்வை மது போதைக்கு ஈடானது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் காதலில் விழும் பெரும்பாலான ஆண்கள் மெய் மறந்த நிலைக்கு சென்று விடுகின்றனர்.

அதோடு காதலிக்கும் ஆண்களிடம் உற்சாகமும் மகிழ்ச்சியும் குடிகொண்டு விடுகிறது. ஹார்மோன்கள் செய்யும் ரகளையால் அவர் சமூகம் என ஒன்று இருப்பதையே மறந்து விடுகிறார். இதை நியூரோகெமிக்கல் விளைவு என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. அதாவது ஒரு நபர் மது அருந்தும்போது அவர் மூளையில் எப்படி அதிகபடியான மகிழ்ச்சி ஏற்படுமோ (விளைவு) அதற்கு கொஞ்சமும் குறையாமல் இந்தக் காதலும் அந்த நபருக்கு அதிகபடியான புத்துணர்வையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறதாம்.

இந்தச் சந்தோஷம் தலைக்கேறிப் போவதால்தான் ஒரு ஆண் பஸ் ஸ்டான்ட், ரயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய காதலியின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார். இதைத் தாண்டியும் சிலர் சேட்டையை ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு எல்லாம் ஒரே காரணம் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள்தான். அதாவது காதலிக்கும் அந்த நபருக்கு டோப்பமைன் ஹார்மோன் மற்றும் ஹெப்பி ஹார்மோன்கள் அதிகளவில் சுரந்து Euphoric எனப்படும் பரவச நிலைக்கு அவரைத் தள்ளிவிடுகிறது.

இதனால் போதை அருந்தியவரைப் போன்ற விளைவுகள் இவருக்கும் ஏற்பட்டு “காதலுக்கு கண் இல்லை“ என்ற பழமொழிக்கு ஒரு சிறந்த உதாரணமாக மாறிவிடுகிறார். இப்படியான அதீத பரவசத்தில் ஒரு ஆண் தனது காதலியைப் பற்றியோ அவரது ஆளுமையைப் பற்றியோ சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. இதனால்தான் பெரும்பாலான காதல் முறிவில் போய் முடியவும் செய்கிறது.

எனவே காதலிக்கும் ஆண்களே ஹார்மோன்கள் செய்யும் சேட்டைக்கு செவி சாய்க்காமல், சற்று நிதானித்து செயல்படுங்கள். அப்போதுதான் காதலில் வெற்றி கனியை சுவைக்க முடியும்.