தமிழகத்தில் பருவமழை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்படுவதாக அமைச்சர் பேட்டி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று வரையிலான இயல்பான மழையளவு 287.9 மி.மீ. ஆனால் இதுவரை 180.7 மி.மீ அளவு மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழையைவிட 37% குறைவாகும். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான அளவும் 31 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவும் மழை பெய்துள்ளது.
தொடர்மழையின் காரணத்தால் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான ஏரிகளில் நீரின் அளவு உயர்ந்து வருகிறது. ஆங்காங்கே அதிகாரிகள் தொடர்ந்து நீர்மட்டம் மற்றும் நீர்த்தேக்க அளவை பார்வையிட்டு வருகின்றனர். சரியான நேரத்தில் யாரும் பாதிக்கப்படாத வகையில் ஏரிகள் திறந்து விடப்படும். அதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். அதில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இதில் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்க அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இயல்பு நிலையை விட 40% குறைவாக வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்துள்ளது. தொடர்மழையால் ஏரிகள் நிரம்பினால் உபரிநீரை வெளியேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments