இன்ஸ்டா இளம்பெண்களை குறிவைத்த இம்சை இளைஞர்கள்: கோடிக்கணக்கில் மோசடி
- IndiaGlitz, [Friday,July 03 2020]
இன்ஸ்டாகிராமில் இருக்கும் பணக்கார இளம் பெண்களை குறிவைத்து அவர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்த இளைஞர்கள் கூட்டம் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கீழக்கரையைச் சேர்ந்த முகமது மைதீன் என்ற இளைஞர் ஜெர்மனியில் படித்து வருகிறார். இவர் ஜெர்மனியில் இருந்து கொண்டே ராமநாதபுரத்தில் இருப்பது போன்ற போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்து அதன் மூலம் வசதியான பெண்களிடம் முதலில் பழக ஆரம்பித்து, அதன் பிறகு அந்த பெண்கள் பதிவு செய்யும் புகைப்படங்களை மார்பிங் செய்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக தெரிகிறது
இதே பாணியில் பல பெண்களை முகமது மைதீன் மிரட்டியதாகவும் அவனுக்கு சென்னையில் உள்ள நண்பர்கள் சிலர் உதவி செய்ததாகவும் தெரிகிறது. மேலும் மார்பிங் புகைப்படங்களை வைத்து மிரட்டி பல இளம்பெண்களை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக வீடியோ எடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கீழக்கரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்கள். இம்சை இளைஞர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் விசாரணை செய்ததில் சென்னை பாசித் அலி, புதுச்சேரி முகம்மது இப்ரஹிம் நூர், நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல், நாகப்பட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோர்கள் ஜெர்மனி முகமது மைதீனுடன் கூட்டு சேர்ந்து இந்த குற்றத்தை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது
இதுகுறித்த விசாரணையில் புகார் கொடுத்த பெண் மட்டுமின்றி பல பெண்களை மிரட்டி கோடிக்கணக்கில் இந்த கும்பல் பணம் சம்பாதித்ததும் இந்தப் பணத்தின் மூலம் ஜெர்மனியிலுள்ள முகமது மைதீன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல் ஆகிய இருவரை கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியில் இருக்கும் முகமது மைதீனையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இன்ஸ்டாகிராமில் இளம்பெண்கள் புகைப்படங்களை பதிவு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் இம்மாதிரியான காமுகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பழகும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது