கேப்டன் வில்லியம்சனுக்கு காயம்? உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருப்பாரா?
- IndiaGlitz, [Wednesday,June 09 2021] Sports News
ஐசிசி டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அவர் உலகக் கோப்பை இறுதி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்தும் சிலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணிக்கும் இரண்டாம் இடம் பிடித்துள்ள இந்திய அணிக்கும் இடையிலான இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டனில் வரும் ஜுன் 18-22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிக் கொண்ட ஒரு தொடரை விளையாடி வருகிறது. அதன் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 13 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன்னையும் எடுத்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கடுமையாகச் சொதப்பி இருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு இடதுகை முழங்கையில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் இதனால் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடவில்லை என்றால் உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை தவிர அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான மிட்சல் சாண்ட்னர், ட்ராண்ட் போல்ட் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் சாண்ட்னர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். ட்ராண்ட் போல்ட் தற்போது காயத்தல் இருந்து மீண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உலகக்கோப்பை இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி எப்படி சமாளிக்கும்? வெற்றி வாய்ப்பை எட்டிப்பிடிக்குமா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.