இஞ்சி இடுப்பழகி திரைவிமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகுபலி, ருத்திரம்மாதேவி என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த பின்னர் வித்தியாசமான கதாபாத்திரத்தை அனுஷ்கா ஏற்று நடித்த படம், ஒரு திரைப்படத்திற்காக எந்த நடிகையும் செய்ய துணியாத உடல் எடை அதிகரித்தலை தைரியமுடன் செய்தவர் என்றெல்லாம் ரிலீஸுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படம், எதிர்பார்த்தலை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்.
மகள் அனுஷ்கா குண்டாக இருக்கும் காரணத்தால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றது என்ற கவலையில் அம்மா ஊர்வசி, பேத்தியின் உடல் எடையை கண்டுகொள்ளாமல் அவளுடைய சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் அனுஷ்காவின் தாத்தா, இவர்கள் மத்தியில் இருக்கும் அனுஷ்காவை டாக்குமெண்டரி படம் எடுக்கும் ஆர்யா பெண் பார்க்க வருகிறார்.
பெண் பார்க்க வந்த இடத்தில் ஆர்யாவை தனியாக அழைத்து பேசும் அனுஷ்கா, இந்த திருமணத்தில் தனக்கு இஷ்டம் இல்லை என்று கூற நானும் அதையேதான் சொல்ல விரும்பினேன், அப்பா, அம்மா கட்டாயப்படுத்தியதால் பெண் பார்க்க வந்ததாக ஆர்யாவும் கூறுகிறார். ஆனாலும் அவ்வப்போது தற்செயலாக மீண்டும் சந்தித்து நல்ல நண்பர்களாக இருக்க முயல்கின்றனர்.
இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்யாவிடம் மனதை பறிகொடுக்கின்றார் அனுஷ்கா. ஆனால் ஆர்யா இன்னொரு பெண்ணை விரும்புகிறார் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் அனுஷ்காவின் தோழி, 'சைஸ் ஜீரோ' என்ற உடல் எடையை குறைக்கும் நிலையத்தில் சேர்கிறார். இந்த நிலையத்தை நடத்தும் பிரகாஷ்ராஜ், உடல் எடையை சீக்கிரம் குறைக்க சில தடை செய்யப்பட்ட மருந்துகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றார்.
இந்த நிலையத்தில் தானும் உடல் எடையை குறைக்க வரும் அனுஷ்கா பிரகாஷ்ராஜின் போலித்தனத்தை கண்டுபிடிக்கின்றார். இந்நிலையில் அனுஷ்காவின் தோழிக்கு கிட்னி செயல் இழக்கின்றது. எனவே ஆர்யாவுடன் இணைந்து பிரகாஷ்ராஜுக்கு எதிராக நடத்தும் அனுஷ்கா நடத்தும் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? என்பதுதான் மீதிக்கதை
பொதுவாக தமிழ் படங்களில் ஹீரோவுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். அத்தி பூத்தாற்போல் '36 வயதினிலே' போன்று ஒருசில படங்கள் மட்டும் நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படம் முழுக்க முழுக்க அனுஷ்கா படம். உடல் எடையால் படும் அவஸ்தைகள், வீட்டில் உள்ளவர்கள் முதல் வெளியில் இருப்பவர்கள் வரை அனைவரும் செய்யும் கிண்டல்களை எதிர்நோக்குதல், பிரகாஷ்ராஜ் தவறானவர் என்று தெரிந்தவுடன் அவருக்கு எதிராக புத்திசாலித்தனமாக காய் நகர்த்துதல், இடையே ஆர்யாவுடனான மெல்லிய காதல் என அனுஷ்காவுக்கு படம் முழுவதும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. அதை மிஸ் செய்யாமல் திறமையாக நடித்துள்ளார்.
டாய்லட் குறித்து டாக்குமெண்டரி படம் எடுப்பவராக வரும் ஆர்யா, பெயரளவுக்கு ஹீரோவாக வலம் வருகிறார். பிரகாஷ்ராஜை வீழ்த்த அனுஷ்காவுக்கு அவ்வப்போது ஐடியா கொடுப்பது, அனுஷ்கா குண்டாக இருந்தாலும் அவருடைய நல்ல மனதை புரிந்து கொண்டு மனதுக்குள் காதலிப்பது, கடைசியில் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் கடைசி நேரத்தில் தன்னுடைய காதலை சொல்வது என ஒருசில காட்சிகளில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அனுஷ்கா, ஆர்யாவுக்கு பின்னர் ஊர்வசியின் நடிப்பை குறிப்பிட்டு சொல்லலாம். கிளைமாக்ஸில் ஊர்வசி எடுக்கும் முடிவு எதிர்பாராதது. போலி எடை குறைக்கும் நிலையம் நடத்தும் பிரகாஷ்ராஜ் தனது வழக்கமான நல்லவர் போன்று நடிக்கும் வில்லன் வேடம்.
சோனல் செளஹானுக்கு ஆர்யாவை காதலித்து பின்னர் ஏமாறும் வேடம். ஆர்யா முதலில் தன்னை காதலிப்பதாக சொல்லும்போது சந்தோஷம் அடைவதும், பின்னர் ஆர்யாவின் மனது கொஞ்சம் கொஞ்சமாக அனுஷ்காவை நோக்கி செல்வதை தூர இருந்து பார்த்து மனதுக்குள் வருந்துவது என இயல்பாக நடித்துள்ளார்.
மரகதமணியின் அனைத்து பாடல்களிலும் தெலுங்கு வாடை தூக்குவதால் மனதில் பதிய மறுக்கின்றது. ஆனால் பின்னணி இசையை காட்சிக்கு தகுந்தவாறு அருமையாக போட்டுள்ளார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பும் கச்சிதம்.
இயக்குனர் பிரகாஷ்ராவ், இயற்கையாக இருக்கும் உடலை அழகாக ரசிக்க கற்று கொள்ளுங்கள், ஒல்லியாக இருப்பவர்கள்தான் அழகு, குண்டாக இருப்பவர்கள் அசிங்கம் என்ற கண்ணோட்டத்தை தவிருங்கள் என்ற நல்ல மெசேஜை கூறியதற்காக பாராட்டலாம். அதேபோல் தற்கால நாகரீக உலகம் காதல், கல்யாணம், விவாகரத்து எல்லாமே இன்ஸ்டண்ட்டாக நடக்கின்றது. அதைபோல் உடல் எடையையும் அரைமணி நேரத்தில் குறைக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு என்ற கருத்தையும் சொல்லியுள்ளார். ஆனால் முதல்பாதி கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. அதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். கிளைமாக்ஸ் கொஞ்சம் இழுவையாக இருக்கின்றது. படம் முடிந்துவிட்டது என்று எண்ணியபோது மீண்டும் கதை நகர்ந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் கிளைமாக்ஸில் நாகார்ஜூனா, ஜீவா, பாபிசிம்ஹா, தமன்னா, ஸ்ரீதிவ்யா, காஜல் அகர்வால், ரேவதி என ஒரு நட்சத்திர கூட்டத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தியுள்ளார்.
மொத்தத்தில் அனுஷ்காவின் அர்ப்பணிப்பான நடிப்பிற்கும், நல்ல மெசேஜை தந்துள்ளதற்காகவும் ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout