வேலைக்கு சேர்ந்த மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய பெண் ஐடி ஊழியர்

  • IndiaGlitz, [Friday,July 07 2017]

கடந்த சில மாதங்களாகவே ஐடி ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று மைசூரில் ஒரு பெண் ஊழியர் தான் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
21 வயது மீனாட்சி என்ற இளம்பெண் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மைசூரில் உள்ள பிரபல முன்னணி நிறுவனம் ஒன்றில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறை மூன்று நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதாகவும், அறையில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மீனாட்சியின் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மீனாட்சியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது உடல் பிரேதப்பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீசார் மீனாட்சியின் அறையை ஆய்வு செய்தபோது லட்டர் எதுவும் கிடைக்கவில்லை. மீனாட்சியின் தாயார் இதுகுறித்து கண்ணீருடன் கூறியபோது, 'தனது மகளுடன் கடைசியாக கடந்த சனிக்கிழமை பேசியதாகவும், அதன் பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். இதுகுறித்து மீனாட்சி பணிபுரியும் அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, 'ஒரு நல்ல ஊழியரை இழந்துவிட்டது குறித்து எங்களுக்கு பெரும் துயரமாக இருப்பதாகவும், இதுகுறித்த விசாரணைக்கு அலுவலகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் கூறினார். மேலும் மீனாட்சியின் பெற்றோர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் அவர் தெரிவித்தார்.