ஏழுமலையானுக்கு தங்க சங்கு, பலகை காணிக்கை… விலையில் டிவிஸ்ட் வைத்த இன்ஃபோசிஸ் சுதா நாராயணமூர்த்தி

  • IndiaGlitz, [Tuesday,July 18 2023]

இந்தியாவில் டெக் நிறுவனத்தை துவங்க நினைக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் நட்சத்திர நாயகனாக இருந்துவரும் வருபவர் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி. அவரும் அவருடைய காதல் மனைவியுமான சுதா இருவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நிலையில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை காணிக்கையாக கொடுத்துள்ளனர்.

சமீபகாலமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அந்த வகையில் ரிலையன்ஸ் குழுமத்தின் செயல் தலைவர் முகேஷ் அம்பானி சமீபத்தில் 1 கோடி ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக அளித்திருந்தார். தற்போது நாராயண மூர்த்தி மற்றும் சுதா தம்பதிகள் இருவரும் திருப்பதி சென்ற நிலையில் ஆமை வடிவில் செய்யப்பட்ட தங்கப்பலகை மற்றும் தங்க சங்கு இரண்டையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இந்தத் தகவலை ஆந்திர முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ராஜீவ் கிருஷ்ணா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் பொருட்கள் அனைத்தும் தேவஸ்தான கமிட்டி தலைவர் தர்மரெட்டி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சுதாவிடம் காணிக்கை பொருட்களின் எடை மற்றும் விலை குறித்து கேள்வி எழுப்பியபோது காணிக்கையாக கொடுத்திருப்பதாகவும் அதற்கு விடை கிடையாது என்றும் அவர் பதிலளித்து இருப்பது பலரிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுதா நாராயண மூர்த்தி திருப்பதி தேவஸ்தானத்தில் முன்னாள் அறக்கட்டளை குழு உறுப்பினராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இவர்களுடைய நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. மேலும் அவருடைய மருமகனும் இங்கிலாந்து பிரதமருமான ரிஷி சுனக் பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற தம்பதிகள் விலையுயர்ந்த பொருட்களை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.

சமீபத்தில் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியிடம் அவருடைய தொழில் பற்றி கேள்வி எழுப்பியபோது என்னுடைய மனைவியின் பிறந்த நாள் அன்று என்னுடைய வேலையை விட்டுவிட்டு நிறுவனத்தை துவங்க இருப்பதாகக் கூறினேன். இதைக் கேட்டுவிட்டு சற்றும் உடைந்துபோகாத அவர் இருப்பதை வைத்து வாழ்வோம். உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன். நீங்கள் நிச்சயம் வெற்றிப்பெறுவீர்கள் என்று கூறியதாகவும் என்னுடைய வாழ்க்கையில் சுதாவிடம்தான் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்றும் கூறியிருந்தார்.

அரசு அதிகாரியாக இருந்த தகப்பனுக்கு 8 குழந்தைகளில் ஒருவராக பிறந்த நாராயணமூர்த்தி முன்னதாக 1976 இல் Softronics நிறுவனத்தை துவங்கி வெறும் ஒன்றரை வருடங்களில் அதில் படு தோல்வி அடைந்தார் என்பதும் அதையடுத்து தன் மனைவியிடம் இருந்து வாங்கிய 10 ஆயிரம் பணத்தை வைத்துக்கொண்டு நண்பர்கள் 7 பேருடன் கூட்டணி சேர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அவர் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர 2 ஆண்டுகள் வரைக்கும் அவருடைய நிறுவனத்தில் கம்பியூட்டர் இல்லாமலேயே வேலை பார்த்து வந்ததாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.