கூகுள் சுந்தர் பிச்சைக்கே செம டஃப்… 4 பணக்கார இந்திய பெண் சிஇஓ-க்கள்!
- IndiaGlitz, [Tuesday,July 18 2023]
சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 100 பணக்கார பெண்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 முக்கிய நிறுவனங்களின் பெண் சிஇஓக்கள் இடம்பிடித்த நிலையில் அதில் ஒருவருடைய சொத்து மதிப்பு கூகுள் சுந்தர் பிச்சையைவிட அதிகமாக இருப்பது பலருக்கும் பெரிய ஆச்சர்யத்தையே ஏற்படுத்தி உள்ளது.
உலக அளவில் பெரிய வணிக நிறுவனங்களின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மிகவும் வரவேற்பு பெற்றவர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளா, மற்றும் கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் செயல்தலைவர் சுந்தர் பிச்சை ஆகியோர் பெரிய வரவேற்பை பெற்றுள்ளனர். மேலும் இவர்களுடைய சொத்து மதிப்பும் அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின் படி கூகுள் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1.13 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற தகவல் வெளியானது. இதனால் இந்திய அளவில் முதல் பணக்கார சிஇஓ என்று அவர் கொண்டாடப்பட்டார்.
இந்நிலையில் கனிணி நெட்வொர்க்கிங் நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துவரும் ஜெயஸ்ரீ உல்லால், 2.4 பில்லியன் சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 100 பணக்கார பெண்களின் பட்டியலில் 15 ஆவது இடத்தைப் படித்துள்ளார். இதனால் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பை விட இவர் பணக்கார சிஇஓவாக வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.
லண்டனில் 1961 இல் பிறந்த இவர் டெல்லியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டடம் பெற்றார். அடுத்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மை படிப்பை முடித்த இவர் கடந்த 2014 அரிஸ்டா நெட்வொர்க்கின் இணைந்தார். தொடர்ந்து வீழ்ச்சியில் இருந்த அந்த நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கும் கொண்டு வந்துள்ளார்.
அந்த வகையில் கடந்த 2018 இல் 1.3 பில்லியன் டாலராக இருந்த இவருடைய சொத்துமதிப்பு தற்போது 2.4 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
நீரஜா சேத்தி- ஐடி கன்சல்டிங் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான Synte நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்து வருகிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 100 பணக்கார பெண்களின் பட்டியலில் 25 ஆவது இடத்தைப் பிடித்த இவருடைய சொத்து மதிப்பு 900 மில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது.
நேஹா நர்கெடே - கிளவுட் நிறுவனமான கன்ஃப்ளூயண்டின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்துவரும் நேஹா நர்கெடே ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 100 பணக்கார பெண்களின் பட்டியலில் 50 ஆவது இடத்தைப் பிடித்து 520 மில்லியன் டாலர் சொத்து மதிப்புகளைக் கொண்டிருக்கிறார். இவருடைய வயது 38 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திரா நூயி- பெப்சிகோவின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி இந்நிறுவனத்தில் 24 வருட சேவையை ஆற்றியுள்ளார். அந்த வகையில் கடந்த 2019 இல் ஓய்வுப்பெற்ற அவருடைய சொத்து மதிப்பு 350 மில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. தற்போது 67 வயதான இவர் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 100 பணக்கார பெண்களின் பட்டியலில் 77 ஆவது இடத்தைப் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.