உலக வங்கி தலைவர் ஆகிறாரா சென்னை பெண்
- IndiaGlitz, [Wednesday,January 16 2019]
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கியின் தலைவராக இருந்து ஜிம் யாங் கிம் என்பவர் இம்மாத இறுதியில் பதவி விலக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
இந்த பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப், ஐ.நா.வுக்கான அமெரிக்க முன்னாள் தூதரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே உள்பட ஒருசிலர் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெப்சி நிறுவனத்தின் முதல் பெண் சி.இ.ஓஆக பதவி வகித்தவரும் சென்னையை சேர்ந்தவருமான இந்திரா நூயியை இந்த பதவிக்கு முன்னிறுத்த வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாகவும், இவாங்கா டிரம்ப், இந்திரா நூயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த 63 வயது இந்திரா நூயி, பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 12 வருடமாக பதவி வகித்தவர் என்பதும், கடந்த ஆண்டுதான் அப்பொறுப்பில் இருந்து இந்திரா நூயி பதவி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.