விமான பயணியை மூர்க்கத்தனமாக தாக்கிய இண்டிகோ ஊழியர்: வைரலாகும் வீடியோ
- IndiaGlitz, [Wednesday,November 08 2017]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இண்டிகோ விமான பணியாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இந்தியாவின் வெள்ளி மங்கை பி.வி.சிந்து குற்றம் சாட்டியிருந்தார். இந்த அதிர்ச்சி இன்னும் மக்களின் மனதில் இருந்து விலகும் முன்பே, விமான பயணி ஒருவரை இண்டிகோ ஊழியர்கள் மூர்க்கத்தனமாக தாக்கிய வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் செல்வதற்கான பேருந்தில் ஏற பயணி ஒருவர் முயன்றார். ஆனால் அவரை இண்டிகோ ஊழியர் ராஜிவ் கட்டியால் என்பவர் பேருந்தில் ஏறுவதை தடுத்துள்ளார். இதனால் பயணிக்கும் ஊழியருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இண்டிகோ ஊழியர் பயணியை கீழே தள்ளி அவரது கழுத்தை நெறிக்க முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தை இன்னொரு இண்டிகோ ஊழியர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதுகுறித்து விமானத் துறை அமைச்சர் ஜெயந்த், இண்டிகோ நிறுவனர் ராகுல் பாடியாவிடம் பேசியதை அடுத்து இண்டிகோ நிறுவனம் தற்போது இந்த சம்பவத்திற்காக மன்னிப்பும் கேட்டுள்ளது.
இதுகுறித்து இண்டிகோவின் தலைவர் மற்றும் முழு நேர இயக்குநர் ஆதித்யா கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாடிக்கையாளர்களை மரியாதையுடன் நடத்துவதே எங்கள் சேவையின் அடித்தளம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்கிறோம். இந்த காரணத்தால் தான் தேசத்தில் இருக்கும் மற்ற விமான சேவைகளை விட இண்டிகோ சேவையை வாடிக்கையாளர்கள் அதிக முறை தேர்ந்தெடுத்துள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் எங்கள் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. அந்த சம்பவம் குறித்த காணொலி எங்கள் பார்வைக்கு வந்தது, நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது சம்பந்தப்பட்ட பணியாளர்களை நாங்கள் இடைநீக்கம் செய்துள்ளோம். சம்பவம் நடந்த அன்றே தனிப்பட்ட முறையில் அந்த வாடிக்கையாளரை நான் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டேன். எப்படி கோபமூட்டியிருந்தாலும் எங்கள் பணியாளர் எல்லை மீறியிருக்கிறார். எங்கள் நடைமுறைகளை பின்பற்றவில்லை. எங்கள் பணியாளரால், எங்கள் பயணி எப்படியான அசவுகரியத்தை அனுபவத்திருப்பார் என்பதை நான் உணர்கிறேன். மீண்டும், தனிப்பட்ட முறையில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நடந்த சம்பவம் எங்கள் கொள்கையை பிரதிபலிக்கும் செயல் அல்ல' என்று கூறியுள்ளார்.