இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இணைந்தன: அதிகாரபூர்வ அறிவிப்பு!
- IndiaGlitz, [Sunday,March 27 2022]
இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் நாடு முழுவதும் உள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிவிஆர் சினிமாஸ் நிறுவனங்களின் பங்குகளை அமேசான் உள்பட பல நிறுவனங்கள் வாங்க முயற்சித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரண்டு மல்டிபிளக்ஸ் திரையரங்க நிறுவனங்களும் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புக்கு பின் இந்நிறுவனத்தில் 1500 திரையரங்குகள் நாடு முழுவதும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைந்த இந்த இரண்டு நிறுவனங்கள் இனி பிவிஆர்-ஐநாக்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐநாக்ஸ் இயக்குநர்கள் குழு மற்றும் பிவிஆர் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில், பிவிஆர் உடன் ஐநாக்ஸின் அனைத்துப் பங்குகளையும் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு முறையே ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது. பங்குச் சந்தைகள், செபி மற்றும் தேவைப்படும் பிற ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஒப்புதல்களும் கிடைத்தவுடன், இணைப்பு நடைமுறைக்கு வரும்
பிவிஆர் நிறுவனத்தின் தலைவர் அஜய் பிஜிலி ஒன்றிணைந்த பிவிஆர்-ஐநாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.