முதல் முறையாக இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் பெண்… யார் தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,February 05 2022]
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. இதைத்தவிர பணக்காரர்களின் சொத்துமதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சிலரின் சொத்து மதிப்பு அதள பாதாளத்திற்கும் சென்றிருக்கிறது. இந்நிலையில் இந்தியப் பணக்காரர்களின் சொத்துமதிப்பு குறித்த தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய வர்த்தக நேரத்தின் முடிவில் கௌதம் அதானியின் சொத்துமதிப்பு 90.8 பில்லியன் டாலராகக் கணிக்கப்பட்டு அவர் இந்தியாவின் முதல் பணக்காரர் எனும் அடையாளத்தைப் பெற்றுள்ளார். இவர் உலகப் பணக்காரர் வரிசையில் தற்போது 10 ஆவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 89.2 பில்லியன் டாலரை எட்டியிருக்கிறது. இவர் இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் உலகப் பணக்காரர் பட்டியலில் 11 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை 3 ஆவது இடத்தில் ஹெச்சிஎல் நிறுவனம் 28.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் முறையாக 3 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் நிறுவனர் ஷிவ் நாடாராக இருந்தாலும் அவருடைய மகள் ரோஷினி நாடார் கடந்த 2009 இல் இருந்து ஹெச்சிஎல் நிறுவனத்தின் செயல்தலைவராக இருந்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து 19.9 பில்லியன் டாலருடன் 4 ஆவது இடத்தில் ராதாகிஷன் தமனியும் 18.2 பில்லியன் டாலருடன் லட்சுமி மிட்டல் 5 ஆவது இடத்திலும் இருக்கின்றனர். தொடர்ந்து ஜிண்டால் குழுமத்தின் செயல்தலைவர் சாவித்ரி ஜிண்டா 17.5 பில்லியன் டாலருடன் 6 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இதனால் முதல் முறையாக பணக்காரர்களின் பட்டியலில் இவர் இடம்பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து 17.1 பில்லியன் டாலருடன் குமார் மங்களம் பிர்லா 7 ஆவது இடத்தையும் கொரோனா தடுப்பூசி தயாரித்துவரும் சீரம் நிறுவனத்தின் செயல்தலைவர் சைரஸ் பூனவல்லா 16.8 பில்லியன் டாலருடன் 8 ஆவது இடத்திலும் திலீப் ஷங்வி 15.7 பில்லியன் டாலருடன் 9 ஆவது இடத்தையும் உதய் கோட்டாக் 15.4 பில்லியன் டாலருடன் 10 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த வரிசையில் ரோஷினி நாடார், சாவித்திரி ஜிண்டால் என இரு பெண்கள் இடம்பிடித்து இருப்பது இந்திய அளவில் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.