HCL நிறுவனத்தின் தலைவராகும் இந்தியாவின் பணக்காரப் பெண்!!!
- IndiaGlitz, [Friday,July 17 2020]
HCL நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் ஷிவ் நாடார் வருகிற 17 ஆம் தேதி தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதனால் அவருடைய மகள் ரோகிணி நாடார் மல்கோத்ரா அடுத்த நிர்வாகத் தலைவராக பொறுப்பு வகிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஷிவ் நாடாரின் மகளான ரோகிணி நாடார் மல்கோத்ரா (38) இந்தியா மட்டும் அல்ல உலக அளவில் பெரும் பணக்காரப் பெண்மணியாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.36 ஆயிரம் கோடி எனவும் கூறப்படுகிறது.
கெல்லாக் வணிக மேலாண்மையியல் பள்ளியில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பை முடித்த இவர் கடந்த ஆண்டு HCL நிறுவனத்தின் தலைவர் குழுவில் ஒருவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாகப் பதவியில் பதவி வகிக்கப் போகிறார் என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது. ஷிவ் நாடார் தலைமை நிர்வாக பதவியில் இருந்து பதவி விலகினாலும் அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநராகவும் ஸ்ட்ரேடஸ் அதிகாரியாகவும் பொறுப்பு வகிப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் அதிகச் சொத்துடைய பெண்மணி ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பதவியில் அமருவது குறித்து பலரும் தற்போது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.