ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுவதும் வெளிமாநிலத் தொழிலாளிகள் கடும் அவதி!!! 200 கி.மீ வரை நடந்தே செல்லும் அவலம்!!!
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த செவ்வாய்கிழமையில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிமாநிலங்களுக்கு வாழ்வாதாரத்தைத் தேடி சென்ற பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளிகளின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது. தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு அன்றாட தேவைகளுக்காகக்கூட எந்தப்பொருள்களையும் வாங்க முடியாத நிலையில் தற்போது பலர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளனர். ஆனால் போக்குவரத்து, ரயில் போன்ற சேவைகள் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்திய சாலைகளில் தற்போது சிறு சிறு கூட்டமாகத் தொழிலாளர்கள் நடந்து செல்லும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
உத்திரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவுக்கு அருகிலுள்ள ஒட்டுப் பலகை தொழிற்சாலை மூடப்பட்டதால் அங்கு வேலைப்பார்த்த பல தொழிலார்கள் 110 கி.மீ தொலைவில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர். வெளிமாநிலங்களில் அன்றாட வேலைகளைச் செய்யும் பணியாளர்களிடம் சாப்பாட்டுக்குக் கூட பணமில்லாத நிலைமை ஏற்படுகிறது. எனவே வீட்டு வாடகை தரமுடியாமல், உணவுப்பொருட்களை வாங்கமுடியாமல் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப செல்லும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் அடுத்த அகமதாபாத் நகரத்தில் மட்டும் சுமார் 6,000 – 7,000 தொழிலாளர்கள் உள்ளூர் நகரவசதிகளுக்காக அன்றாட வேலைகளைச் செய்துவருகின்றனர். இவர்களும் தங்களது சொந்த ஊர்களான ராஜஸ்தானுக்கு நடந்தே சென்றிருக்கின்றனர். பெரும்பாலும் ரயில்வே தடங்களையொட்டி பயணத்தை மேற்கொண்டதாகக் செய்திகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள், பெரியவர்கள் முதற்கொண்டு தலையில் மூட்டைகளைச் சுமந்துகொண்டு செல்லும் காட்சிப் பார்ப்பவர்களையே கண்கலங்க வைத்திருக்கிறது.
தலைநகர் டெல்லியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வெறிச்சோடிய சாலைகளில் அண்டை மாநிலமான உத்திரப்பிரதேசத்திற்கு நடந்தே சென்றிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. டெல்லியில் இருந்து தங்களது சொந்த ஊர் 200 கி.மீ. தொலைவில் இருந்தாலும், தங்களது வேறுவழியில்லை என்று அந்த இளம் தொழிலாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அன்றாட பணிகளைச் செய்து வருமானம் ஈட்டும் கூலித்தொழிலாளிகளுக்கு உத்திரவாதம் கொண்ட ரேஷன் பொருட்களும் கிடைப்பதில்லை. கையில் பணம் இல்லாமல் நிர்கதியான நிலைமையில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் முடிவில் பல நூறு கி.மீ. தொலைவினை நடந்தே கடக்கின்றனர்.
தமிழக எல்லைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறின. திருவண்ணாமலை, தருமபுரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த சுமார் 250 கூலித்தொழிலாளர்கள் கர்நாடகாவின் பெங்களூர் தலைநகரத்தில் வேலைப்பார்த்து வந்தனர். ஊரடங்கு உத்தரவினால் அன்றாட தேவைகளுக்கே வழியில்லாமல் தங்களுக்கு சொந்த கிராமங்களக்கு நடைபயணமாகத் திரும்பிய நிலையில், அவர்களைத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்பு, மாநில போக்குவரத்து வாகனங்களின் மூலம் சொந்த கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.