இந்தியாவிற்கும் வந்துவிட்ட மர்மத்தூண்? தொடரும் பீதி…
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக, ஆள்நடமாட்டமே இல்லாத இடங்களில் திடீரென உலோகத்தூண் தோன்றுவதும் பின்னர் அது காணாமல் போவதும் கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் தோன்றிய இந்த விசித்திரம் அடுத்தடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுவரை இந்தத் தூண்களை யார் வைக்கிறார்கள்? அது எப்படி மீண்டும் காணாமல் போகிறது? என்பது குறித்த எந்த விவரமும் தெரியாமல் விஞ்ஞானிகளே குழம்பி வருகின்றனர்.
மேலும் இந்த மர்மத்தூண்கள் அனைத்தும் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியான வடிவத்தில் செங்குத்தாகவே இருக்கின்றன. அதோடு இது உலோகத்தால் செய்யப்பட்டதாக பளபளப்புடன் பார்வைக்கு தெரியுமாறு வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் இருக்கும் மற்றொரு விசித்திரம் இந்த மர்மத்தூண்கள் வைக்கப்படும் இடங்கள் அனைத்தும் மனிதர்கள் யாரும் நெருங்க முடியாத இடங்களாகவே இருக்கின்றன. இதனால் ஒருவேளை இது ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என்றும் சிலர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட நகரங்களில் தோன்றி இதுவரை பீதியை ஏற்படுத்திய இந்த மர்மத்தூண் தற்போது இந்தியாவிலும் தோன்றி இருக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில்தான் இந்த விசித்திரம் நடந்து இருக்கிறது. தால்தேஜில் எனும் பகுதியில் அமைந்து இருக்கும் சிம்பொனி தனியார் வன பூங்காவில் நேற்று முன்தினம் இரவு முதல் 6 அடிக்கு ஒரு உலேகாத்தூண் காட்சி அளிக்கிறது. ஆனால் இதுகுறித்து அங்கு வேலைப் பார்க்கும் ஊழியர்கள், தங்களுக்கு இது எப்படி வந்தது எனத் தெரியாது என்றே கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் யூட்டா பாலைவனம், அடுத்து ருமேனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து, பிரிட்டன் என மர்மத்தை ஏற்படுத்திய உலோகத்தூண் தற்போது இந்தியாவிலும் தோன்றி இருக்கிறது. ஆனால் மற்ற தூண்களைப் போல அல்லாமல் இருந்த இடத்திலே இருப்பது மேலும் சந்தேகத்தை வரவழைப்பதாகச் சிலர் கருத்துக் கூறியுள்ளனர். மேலும் இந்த மர்மத்தூணில் மட்டும் சில எண்கள் இருப்பதாகவும் அந்த எண்களுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உலகம் முழுவதும் நீடிக்கும் உலேகத்தூண் மர்மங்கள் குறித்து பலரும் விசாரணைகளைத் தொடங்கி விட்டனர். அதில் யூட்டா பாலைவனத்தில் வைக்கப்பட்ட தூண் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. நியூ மெச்கிகோவில் உள்ள தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட் எனும் கலைக்குழு யூட்டா பாலைவனத்தில் ஒரு சுவாரசியத்திற்காக இந்த தூணை வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். அடுத்து பிரிட்டனில் தோன்றிய ஒரு தூணை நேஷனல் டிரஸ்ட் விற்பனை நோக்கில் வைத்ததாக ஒப்புக்கொண்டது. ஆனால் மற்ற தூண்களை வைத்தது யார் என்பது குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியாக வில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments