டெல்லியில் 'லண்டன் மேடம் டூசாட்ஸ்' அருங்காட்சியின் கிளை
- IndiaGlitz, [Thursday,January 12 2017]
உலக தலைவர்களின் மெழுகுசிலைகள் இடம்பெற்றுள்ள லண்டன் மேடம் டூசாட்ஸ் என்ற அருங்காட்சியகம் குறித்து அறியாதவர்கள் இருக்க முடியாது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தென்னாப்பிரிக்க புரட்சியாளர் நெல்சன் மண்டேலா மற்றும் பல பாலிவுட் பிரபலங்களான ஐஸ்வர்யாராய், கரீனா கபூர், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், உள்பட பல பிரபலங்களின் மெழுகு சிலை இங்கு இடம் பெற்றுள்ளது. உலக புகழ் பெற்ற இந்த மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் ஒரு இடம் ஆகும்
இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தின் கிளை வரும் ஜூன் மாதம் இந்திய தலைநகர் டெல்லியில் திறக்கப்பபடவுள்ளது. இந்த தகவலை மெர்லின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இயக்குனர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு பிரிட்டன் சென்றிருந்தபோது நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ரெஜினா சினிமா காம்ப்ளக்ஸில் திறக்கப்படவுள்ள இந்த அருங்காட்சியகத்தின் தொடக்கவிழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இந்திய பிரபலங்களின் மெழுகு சிலைகள் வைக்கப்படவுள்ளதாகவும், டெல்லி வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த அருங்காட்சியகம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.