13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கியில் குவிந்த இந்தியர்களின் பணம்!
- IndiaGlitz, [Friday,June 18 2021]
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய வங்கி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியர்களின் பணம் அந்நாட்டு வங்கிகளில் குவிந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டின் நிலவரப்படி சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என ஒட்டுமொத்தமாக ரூ. ரூ.6,625 கோடியை மட்டுமே சேமித்து வைத்துள்ளனர். ஆனால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சேர்ந்து ரூ.26,700 கோடி ரூபாயை சேமிப்பு கணக்கிலும் சேமிப்பு பத்திரமாகவும் வைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் குவிவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் தொகை சுவிஸ் நாட்டில் உள்ள தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கணக்கு மட்டும்தான் என்றும் மற்ற நாடுகளில் உள்ள சுவிஸ் வங்கிகளில் இன்னும் பல மடங்கு இந்தியர்களின் பணம் குவிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சுவிஸ் அறிக்கையின்படி கடந்த 2019 ஆம் ஆண்டை காட்டிலும் தற்போது சேமிப்பு பத்திரங்கள் அதிகளவு குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகையில் எவ்வளவு கருப்புப் பணம் இருக்கிறது என்பது குறித்த எந்த விளக்கத்தையும் சுவிஸ் நாட்டின் தேசிய அறிக்கை வெளியிடவில்லை. முன்னதாக சுவிஸ் வங்கிகளில் குவிந்து கிடக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதாகப் பல கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ளன. ஆனால் இதுவரை கருப்பு பணம் குறித்த ஒரு தெளிவான விளக்கம் கூட வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.