மருத்துவமனைகளாக மாறும் இந்திய ரயில்கள்
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லாததால் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அதிரடியாக இந்தியன் ரயில்வேயில் உள்ள ரயில் பெட்டிகள் தற்காலிகமாக கொரோனா வைரஸ் மருத்துவமனைகளாக மாற்றப்பட உள்ளது. இது குறித்து தென்னிந்திய ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டிகளும் ஒரு தனி வார்டாக மாற்றப்படும் என்றும் ஒவ்வொரு ரயில் வார்டிலும் இந்தியன் ஸ்டைலில் ஒரு கழிப்பறையும் அதன் அருகில் ஒரு குளியலறையும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள நடு மற்றும் மேல் பர்த்கள் நீக்கப்படும் என்றும் தண்ணீர் பாட்டில், மருத்துவ உபகரணங்கள் வைப்பதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் லேப்டாப், மொபைல் போன்றவை சார்ஜ் செய்வதற்கு தேவையான பிளக்பாயிண்ட்கள் அமைக்கப்படும் என்றும் ரயில் பெட்டியில் உள்ள ஜன்னல்கள் அனைத்தும் பிளாஸ்டிக் திரைகளால் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்படும் வார்ட் ஆக மாற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.