அதிகரித்து வரும் வெஸ்டர்ன் டாய்லட் பயன்பாடு? ஆரோக்கியத்திற்கு நல்லதா?
- IndiaGlitz, [Saturday,August 05 2023]
நவீன வசதி கொண்ட வீடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவில் தற்போது நடுத்தர வர்க்க வீடுகளிலும் வெஸ்டர்ன் டாய்லட் பயன்பாடே இருந்து வருகிறது. இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் பயன்படுத்துவதற்கு எளிதானது என்பதைத் தவிர இதை ஒரு பெருமையாக கருதும் எண்ணமும் இந்தியர்களின் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில் வெஸ்டர்ன் டாய்லட் நல்லதா? அல்லது இந்தியன் டாய்லட் நல்லதா? எனும் விவாதம் நீண்ட காலமாகவே மருத்துவர்கள் மத்தியில் இருந்துவரும் நிலையில் அதுகுறித்த முக்கிய தகவல்கள் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் மலம் கழிப்பதை ஒரு தனிபரின் அந்தரங்கமாகவே கருதுகின்றனர். அந்த வகையில் டாய்லட் வசதிகள் இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் ஆற்றங்கரை, குளம், ஏரிக்கரை, பயன்படுத்தாத ஊரின் எல்லைப் பகுதி போன்ற இடங்களில் யாருக்கும் தெரியாமல் மறைவாக மலம் கழித்து வந்தனர்.
இப்படி குந்த வைத்து மலம் கழிக்கும்போது முட்டிக்கால், கணுங்கால் என அனைத்தும் இயக்கத்திலேயே இருக்கும். மேலும் அந்தக் காலத்தில் உடலுழைப்பு அதிகமாக இருந்ததால் இந்த முறை இந்தியர்களுக்கு எளிதாகவே இருந்தது.
ஆனால் இன்றைக்கு வளர்ந்து விட்ட காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் வெஸ்டர்ன் டாய்லட் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தண்ணீரை உள்ளுக்குள்ளேயே பீய்ச்சி அடிக்கும் இந்த வகை டாய்லட்கள் கடந்த 1880 களில் முதல் முறையாக பிரிட்டனில் பயன்பாட்டிற்கு வந்தது. பின்னர் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளிலும் பரவி 1890 வாக்கில் அமெரிக்காவின் உயர்தர வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பயன்பாட்டிற்கு வந்தன.
ஆனால் இவர்களுடைய டாய்லட் இருக்கை என்பது ஒரு தனிநபர் தனது முட்டிக்கால்களை குறுக்க வேண்டியதில்லை. ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பது போலவே சாதாரணமாக அமர்ந்து கொண்டு மலம் கழிக்கலாம். இதற்காக பெரிய அளவிற்கு சிரமம் எடுக்க வேண்டியதில்லை. இந்த முறை தற்போது உலக அளவில் பிரபலமாகி எல்லா வீடுகளிலும் வெஸ்டர்ன் டாய்லட் முறைக்கு மாறிவிட்டனர்.
இந்த வெஸ்டர்ன் டாய்லட் முறையானது வயதானவர்கள், உடல்நலப் பாதிப்பு கொண்டவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மிக எளிதாக இருக்கும். ஆனால் இந்த வெஸ்டர்ன் டாய்லட் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துவரும் நிலையில் டாகர்ட் எனும் அறிஞர் கூறியிருக்கும் சில கருத்துகள் நம்மை பயமுறுத்துகின்றன.
அதாவது பெருங்குடலின் அடிப்பகுதியும் மலம் வெளிவரும் நமது ஆசனவாய் பகுதியும் ஒன்று சேரும் இடம் 90 டிகிரி அளவில் L வடிவத்தில் இருக்கும் என்றும் இந்த வடிவம் நேராக இருக்கும்போதே குடலில் இருக்கும் மலம் முழுமையாக வெளியே வரும். இது குந்த வைத்து மலம் கழிக்கும் முறையான இந்தியன் டாய்லட் முறையில் சாத்தியமாகிறது. மேலும் வயிற்று பகுதிக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் முழுமையாக மலம் வெளியேறுகிறது என்றும் கூறுகிறார்.
ஆனால் வெஸ்டர்ன் டாய்லட் முறையில் உடல் நேராகவே இருக்கிறது. முதுகை குறுக்கவோ அல்லது சாய வேண்டிய அவசியமோ இருப்பதில்லை. இதனால் வெஸ்டர்ன் டாய்லட்டுகள் L வடிவத்தில் மலம் கழிப்பதற்கு வழிவகை செய்து கொடுக்காமல் அங்கேயே தங்கி விடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
டாகர்ட் மேற்கொண்ட இந்த ஆய்வில் குந்த வைத்து உட்காரும் இந்தியன் டாய்லட் முறையே சிறந்தது என்றும் இதனால் குடலில் இருக்கும் மலம் முழுவதும் எளிதாக வெளியேறி விடுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் முட்டிக்கால் முதற்கொண்டு கணுங்கால் வரை அனைத்தும் இயங்கி ஒரு உடற்பயிற்சியைப் போன்று பலனை அளிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.