உக்ரைன் - ரஷ்ய போரில் இந்திய மாணவர் உயிரிழப்பு: அதிர்ச்சியில் பெற்றோர்!
- IndiaGlitz, [Tuesday,March 01 2022]
உக்ரைன் நாட்டின் மீது கடந்த 6 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது என்பதும் இந்த போரில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரஷ்ய ராணுவ வீரர்களும் சிலர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் படித்து வரும் இந்திய மாணவர்களை மீட்க ’ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின்படி மத்திய அரசு விமானங்கள் மூலம் மாணவ மாணவிகளை தாய்நாட்டிற்கு திரும்பி அழைத்து வந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஒன்பது விமானங்கள் உக்ரைனில் இருந்து டெல்லி வந்து இருப்பதாகவும் அதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் அங்கு இருப்பதாகவும் அவர்களை மீட்க இந்திய விமானப்படை விமானத்தை அனுப்ப பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் உக்ரேனில் உள்ள கார்கீவ் என்ற நகரில் ரஷ்ய ராணுவம் கடுமையாக தாக்கி வரும் நிலையில் இந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்கீவ் நகரில் இருந்து வெளியேற ரயில் நிலையம் செல்லும் போது குண்டுவெடிப்பில் இந்திய மாணவர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
ரஷ்ய குண்டு வீச்சில் உயிரிழந்த இந்திய மாணவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்திருப்பது அவரது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.