கொரோனா நேரத்தில் ஸ்தம்பிக்கும் இந்திய மாநிலங்கள்!!! காரணம் என்ன???
- IndiaGlitz, [Monday,May 11 2020]
இந்தியாவில் கொரோனா பரவல், கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இங்கு நிலவும் நிதி நெருக்கடி குறித்த விவாதங்களும் முன்னெடுக்கப் படுகின்றன. நிதி நெருக்கடி காரணமாகப் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பல மாநிலங்கள் பின்தங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதையடுத்து மாநிலங்களுக்கான சுயாட்சி குறித்த (உரிமைகள்) பேச்சுகளும் தற்போது தீவிரமாக விவாதிக்கப் படுகிறது. கொரோனா பரவல் நேரத்தில் மாநிலத்தின் சுயாட்சி பற்றி ஏன் கேள்வி எழுப்பப்படுகிறது? அல்லது கொரோனாவுக்கும் மாநில உரிமைகளுக்குமான தொடர்பு என்ன என்பது போன்ற பலதரப்பட்ட விவாதங்கள் தற்போது தொடங்கப் பட்டுள்ளன.
International Monetary fund (Imf) உலகப் பொருளாதார அவுட்லுக் (WEO) கணக்கிட்டு இணையதளம் கொரோனா நேரத்தில் உலக நாடுகள் எவ்வளவு நிவாரணத் தொகையை வழங்கலாம், எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதைக் குறித்த அறிவுரைகளை உலக நாடுகளுக்கு கூறிவருகிறது. Imf கணிப்பின்படி கொரோனா போன்ற நெருக்கடியான பொருளாதாரச் சூழலை மீட்டெடுக்க உலக நாடுகள் அதிகபடியான நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டும். இத்தருணத்தில் உள்நாட்டு உற்பத்தி போன்ற கணிப்புகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெளிவு படுத்தியிருக்கிறது. அப்படி நிவாரணத் தொகையை வழங்காவிட்டால் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்று விளக்கம் அளித்து உள்ளது. அமெரிக்காவின் முந்தைய பொருளாதார நெருக்கடி சமயங்களிலும் (2008) இந்த விதியை பின்பற்றியே அதன் உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பலான தொகையை நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. தற்போதைய கொரோனா நேரத்திலும் இந்த விதிமுறையைத்தான் அமெரிக்கா பின்பற்றி வருகிறது.
இந்நிலையில் கொரோனாவுக்கு இந்திய அரசு ஒதுக்கிய நிவாரணத் தொகையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காடுக்கும் குறைவாக இருக்கிறது என்றும் இந்திய மக்கள் தொகையைப் பொறுத்த வரையில் இது போதுமானதாக இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. உலகின் பல நாடுகள் அவர்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காட்டினை நிவாரண நிதியாக ஒதுக்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே நிவாரணத் தொகை குறைவு என்பதாலும் கொரோனா நேரத்தைக் கட்டுப்படுத்த அதிகபடியான தொகை தேவைப்படும் என்பதாலும் மாநில அரசுகள் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையை விட அதிகபடியான கடனைப் பெற்றுக் கொள்ள விலக்கு அளிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை அதாவது மாநிலத்தின் உற்பத்தியில் 3 அரை விழுக்காடோடு கொரோனாவுக்கு 30 விழுக்காடு அதிகரித்து கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று விதி விலக்கு அளித்திருக்கிறது. அதன்படி பல மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனை பெற்று வருகிறது.
இப்படியான நெருக்கடி நிலைமையில், மாநில அரசுகள் ஏற்கனவே அதிகபடியான கடனை வைத்திருக்கிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எனத் தனியாக கடனை வாங்கினால் மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு எங்கே போவது? மற்ற மேம்பாட்டு திட்டங்கள் என்னாவது என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில்தான் மாநில சுயாட்சி என்ற வார்த்தையும் தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
மாநிலங்களுக்கான நிதி ஆதாரங்கள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பொருட்களின் மீதான எந்த நேரடி வரிகளையும் மாநில அரசால் வசூல் செய்ய முடியாது. இந்நிலையில் அனைத்து மறைமுக வரிகளும் மாநில அரசுக்குத்தான் சொந்தம் எனவும் உறுதியாக சொல்ல முடியாது. மறைமுக வரிகளிலும் ஒரு சில வரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு வசூல் செய்யும் வருவாயை நிதிக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளித்து வருகிறது. இப்படி மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் வருவாய் அதிகபட்சமாக 30-35 விழுக்காடாக இருக்கிறது. இது அளவீட்டில் குறைவான தொகை எனவும் விமர்சிக்கப்படுகிறது.
இதுதவிர மாநில அரசாங்கத்திற்கு 4 வழிகளில் வருவாய் கிடைக்கிறது. 1. பெட்ரோல், டீசல் பொருட்களின் மீதான மதிப்புக்கூட்டு வரி. கொரோனா நேரத்தில் மாநில அரசுக்கு குறைவான வருவாயே கிடைக்கும். 2, பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் போன்ற வருவாய். 3. புதிய வாகனப் பதிவு, சாலை வரி போன்ற வழிகளில் வருவாய். 4. சாராய விற்பனை மற்றும் லாபம் போன்ற வழிகளில் வருவாய். கொரோனா ஊரடங்கினால் மாநிலத்திற்கு இந்த வருவாயும் கிடைக்கவில்லை. எனவே தான் பல மாநில அரசுகள் மது விற்பனை திறப்புக்கு கட்டாயமாகத் தள்ளப்படுகின்றன. மது விற்பனையில் லாபத்தொகையும் மாநிலத்திற்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா தவிர்த்த மற்ற நாட்களில் தமிழகத்திற்கு மேற்கண்ட துறைகளில் இருந்து 60-65 விழுக்காட்டு வருவாய் கிடைத்தது. வளர்ந்த மாநிலத்தில் மட்டுமே இந்த நிலைமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஏன் மாநில சுயாட்சி பற்றி பேசப்படுகிறது என்றால் பற்றாக்குறையை சமாளிக்க பல மாநிலங்கள் கடனை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவசூல் முறை வருவதற்கு முன் பெரும்பாலான துறைகளுக்கு வரியை போடும் உரிமையை மாநில அரசுகள் வைத்திருந்தன. புதிய வரிமுறையினால் மாநில அரசுகள் 70 விழுக்காடு வருமானத்தை இழந்து இருக்கின்றன. அதோடு 40 ஆயிரம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இருக்கிறது. இத்தகைய இக்கட்டான நிலைமையில்தான் மாநில அரசுகள் திண்டாடி வருகின்றன.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் பல மாநில அரசுகள் மத்திய அரசுகளை எதிர்ப் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதற்கும் இதுதான் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆபத்து காலத்தில் மத்திய அரசுக்கு முழு அதிகாரம், மற்ற நேரங்களில் மாநிலங்களுக்கு அதிகாரம் பகிரப்படும் என்ற கூட்டாட்சி தத்துவத்தில் இயங்கிவரும் நாடு தான் இந்தியா. இந்நிலையில் மாநில அரசுகள் கல்வி, நிதி, நீதி சட்டம், ஒழுங்கு என்று அனைத்து துறைகளிலும் தனிப்பட்ட அதிகாரத்தை இழந்து வருவதாகப் பலதரப்புகளிலும் இருந்து குற்றம் சாட்டுகள் அவ்வபோது எழுப்பப்பட்டு வந்தன. கொரோனா இதை மீண்டும் கிளறிவிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.