கொரோனாவின் 53 புதிய மரபணு வரிசைகளை வெளியிட்ட இந்திய விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவல் பற்றிய தன்மைகளைப் புரிந்து கொள்ள உலகம் முழுவதும் ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய விஞ்ஞானிகள் கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் என்பது 11 வகையாக பரிமணித்து இருக்கிறது என்ற புதிய ஆய்வை வெளிப்படுத்தினர். அதில் கொரோனா வைரஸ்கள் குறிப்பிட்ட பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் அதிகளவு பரவிவருகிறது. எனவே கொரோனா நாவல் வைரஸின் மரபணுவில் புது மாற்றங்கள் தோன்றியிருக்கவும் வாய்ப்பிருப்பதாக இந்திய விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பினர்.
அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித சுவாசப் பாதைகளில் காணப்படும் செல்களின் மேற்பரப்பில் உள்ள ACE2 புரதத்தை பற்றிக்கொள்வதற்கு வசதியாக கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. வைரஸின் A2a வகை அமினோ அமிலம் அஸ்பார்டிக் அமிலத்திலிருந்து கிளைசினுக்கு மாற்றப்படுவதால் இந்த செயல்திறனை கொரோனா வைரஸ்கள் பெறுகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகமாவதற்கு A2a வகை பரிமாணம்தான் காரணம் எனவும் இந்திய விஞ்ஞானிகள் தெளிவு படுத்து இருந்தனர். இதே போன்ற ஆற்றல் மற்ற கொரோனா வகை வைரஸ்களிலும் காணப்பட்டது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.
அதைத் தொடர்ந்து தற்போது கொரோனாவின் 53 புதிய மரபணுக்களை இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். டெல்லியிலுள்ள R&D ஆய்வு மையம், அறிவியல் மற்றம் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CISR) ஆகியவற்றின் விஞ்ஞானிகள் தற்போது கொரோனா வைரஸின் மரபணுக்களை கண்டுபிடித்து சர்வதேச கொரோனா வைரஸ் மரபணு தரவுத் தளத்தில் பதிவிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் CISR இன் இயக்குநர் சேகர் கூறும்போது கொரோனா வைரஸின் 450 புதிய மரபணு வரிசைகளை குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும் வரும் மே 15 ஆம் தேதிக்குள் அதை வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பல புதிய பரிமாணங்களையும் திரிபுகளையும் கொண்டதாக இருக்கிறது. எனவே பல புதிய தொற்றுகளை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். புதிய மரபணு வரிசைகளையும் வகைகளையும் புரிந்துகொள்வதால் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மிகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்.
புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ள கொரோனா வைரஸ் மரபணு வரிசைகள் மனித வைரஸ்களுடன் புவியியல் காரணங்கள், மனிதர்களுக்கு இடையிலான தொற்று, விலங்கு மற்றும் பறவை போன்ற தொடர்புகளால் ஏற்பட்ட மாற்றங்களை குறித்தது எனவும் விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர். கடந்த வாரத்தில் அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட சில நோயாளிகளிடம் வீரியமான கொரோனா மரபணு வரிசை காணப்பட்டதாக அந்நாட்டின் தேசிய ஆய்வு செய்தி வெளியிட்டு இருந்தது. எனவே கொரோனா தொற்றுநோய் எவ்வாறு உருவாகிறது, எப்படி பரவுகிறது போன்ற மருத்துவ காரணிகளை மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.
GISAD வின் கருத்துப்படி கொரோனா வைரஸில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரபணு வரிசைகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்கள் ஆய்வுக்காக உலகம் முழுவதும் பல நிறுவனங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள 53 புதிய மரபணு வரிசைகள் கொரோனா நோய் குறித்த தன்மையைப் புரிந்துகொள்ளவும் தடுப்பூசியை கண்டுபிடிக்கவும் மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout