டி.எம்.செளந்திரராஜனுக்கு மத்திய அரசு செய்த கெளரவம்
- IndiaGlitz, [Friday,January 13 2017]
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், நாகேஷ், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ் உள்பட மூன்று தலைமுறை நடிகர்களுக்கு தனது காந்தக்குரலால் ஏராளமான பாடல்களை பாடிய பிரபல பாடகர் டி.எம்.செளந்திரராஜன் நினைவாக மத்திய அரசு ரூ.5 மதிப்பில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
1950ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களையும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்மிக பாடல்களையும் பாடி ரசிகர்களின் மனதில் இன்று குடியிருந்து வருகிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கலைஞர் கருணாநிதி எழுதிய 'செம்மொழி என தமிழ் மொழியாம்' என்ற பாடலையும் செளந்திரராஜன் பாடியுள்ளார்.
இசைத்துறையில் பல்வேறு சாதனைகள் செய்துள்ள டி.எம்.செளந்திரராஜனை கெளரவிக்கும் வகையில் தற்போது தபால் தலை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு, அவருடைய குடும்பத்தினர் சார்பிலும், ரசிகர்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.