பாராலிம்பிக்கில் 4 பதக்கம்… ரவுண்டுகட்டி கலக்கிவரும் இந்திய வீரர்கள்!
- IndiaGlitz, [Monday,August 30 2021] Sports News
மாற்றுத் திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை 3 பிரிவுகளில் பதக்கம் வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் சீன வீராங்கனை யிங் சூ-வுடன் மோதி அவரை 0-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதனால் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை வென்ற பவினாவிற்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
அடுத்து பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். டி47 இறுதிப்போட்டியில் அவர் 2.06 மீ உயரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. நிஷாத் குமார் செய்த இந்த சாதனை ஆசிய சாதனையாகவும் போற்றப்படுகிறது. இதனால் நிஷாத் குமார் வென்றுக்கொடுத்த வெள்ளிப்பதக்கம் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கம்.
அடுத்து பாராலிம்பிக் வட்டு எறிதல் விளையாட்டில் 41 வயதான இந்திய வீரர் வினோத் குமார் F52 பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார். இதனால் இந்தியாவிற்கு 3 ஆவது பதக்கம் கிடைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரரான அவர் பணியின்போது பனிச்சரிவில் சிக்கி கால் முழுவதும் செயலிழந்துள்ளது. அதையடுத்து சொந்த ஊரில் பலசரக்கு கடை நடத்திவரும் வினோத் குமார் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
10 மீ எர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அவனிலேகாரா தங்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.