ஸ்கூபா விளையாடிய போது விபரீதம்: இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் பலி
- IndiaGlitz, [Tuesday,December 05 2017]
அமெரிக்காவில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் மூத்த இயக்குனராக செயல்பட்டு வந்த 49 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், ஸ்கூபா விளையாடியபோது சுறா மீன் தாக்கியதால் பரிதாபமாக பலியானார்.
அமெரிக்காவின் கோஸ்டா ரிக்கா என்ற தீவுக்கு 18 பேர் அடங்கிய குழு ஒன்று ஸ்கூபா விளையாட சென்றது. இந்த குழுவில் இடம்பெற்றிருந்த ரோஹினா பண்டாரி என்பவர் ஸ்கூபா விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது திடீரென புலி சுறா ஒன்று அவரை தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்கூபா பயிற்சியாளர் ரோஹினாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் சுறா தாக்கியதால் இருவரும் படுகாயம் அடைந்தனர். குறிப்பாக ரோஹினாவின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டது
இந்த நிலையில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் ரோஹினா சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். பயிற்சியாளருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புலி சுறா என்று கூறப்படும் ஆபத்தான சுறா மீன்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் வந்ததில்லை என்றும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது வந்து ஒரு உயிரையும் பலிவாங்கிவிட்டதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர்.