யூடியூப் சி.இ.ஓவாக இந்தியர் நியமனம்.. சுந்தர் பிச்சையை அடுத்து மேலும் ஒரு இந்தியருக்கு பெருமை..!

  • IndiaGlitz, [Friday,February 17 2023]

உலகின் நம்பர் ஒன் வீடியோ சமூக வலைதளமான யூடியூப் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடந்த 9 ஆண்டுகளாக யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓவாக சூசன் என்பவர் இருந்து வந்த நிலையில் அவர் தனது உடல் நல காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’கடந்த 25 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தில் இருந்த நான் தற்போது அந்நிறுவனத்தில் இருந்து விலகுகிறேன். மக்களை ஒன்றிணைக்கும் யூடியூபில், உலகெங்கும் உள்ள படைப்பாளர்களால் நான் ஒவ்வொரு நாளும் ஈர்க்கப்பட்டேன். இந்த நிறுவனத்தில் எனக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்தது, அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, ‘யூடியூப் நிறுவனத்திற்கு நீங்கள் ஆற்றி பணியை ஒரே டுவீட்டில் வெளிப்படுத்த முடியாது. கூகுள் மற்றும் யூடியூப்பிற்காக நீங்கள் பெரும் பணி செய்துள்ளீர்கள். பல ஆண்டுகளாக உங்கள் தலைமைத்துவம், நுண்ணறிவு மற்றும் நட்புகளுக்கு மிகவும் நன்றி உடையவர்களாக இருப்போம். நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆலோசனையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் யூடியூப் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓவாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் யூடியூப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கூகுளில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தற்போது அவர் யூடியூப் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யூடியூப் சி.இ.ஓவாக பதவியேற்கும் நீல் மோகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் சி..இ.ஓவாக இந்தியரான சுந்தர் பிச்சை இருந்து வரும் நிலையில் யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓவாகவும் ஒரு இந்தியர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.