இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் அணியும் ஒன்று! எப்படி தெரியுமா?
- IndiaGlitz, [Friday,June 09 2017]
ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் கடந்த ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்திய அணி, நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் எதிர்பாராத தோல்வியை அடைந்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 321 ரன்கள் குவித்தபோதிலும் இலங்கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுக்களை எடுக்க தவறியதால் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இருந்திருந்தால் போட்டி முடிவு மாறியிருக்கும் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான விராத் கோஹ்லி, யுவராஜ்சிங், பாண்டியா ஆகியோர் வெளுத்து வாங்கினர். ஆனால் நேற்றைய போட்டியில் மூவருமே சொதப்பியதும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியும் சரி, இந்திய அரசும் சரி பாகிஸ்தானுக்கு எதிராக காட்டும் வேகத்தை இலங்கைக்கு எதிராக காட்டுவதில்லை என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கினால் உடனடியாக இந்திய அரசும் இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்கும், ஆனால் இலங்கை ராணுவம் காலங்காலமாக தமிழ் மீனவர்களை தாக்குவதை இந்திய அரசு கண்டுகொள்வதில்லை என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.