கற்பனைக்கே எட்டாத ஜாக்பாட்… மாதம் ரூ.5.5 லட்சம் வீதம் 25 வருடத்திற்கு லாட்டரி வென்ற இந்தியர்?

  • IndiaGlitz, [Monday,July 31 2023]

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் இந்தியர் ஒருவருக்கு ஃபாஸ்ட் 5 மெகா ஜாக்பாட் லாட்டரி கிடைத்திருக்கிறது. லாட்டரி என்றால் ஒருமுறை பணத்தை வென்று வீட்டிற்கு எடுத்துச் செல்லுவோம். ஆனால் இந்த லாட்டரியில் 25 வருடத்திற்கு மாதம் தோறும் பணம் வழங்கப்படும் என்பதுதான் படு ஆச்சர்யமாக இருக்கிறது.

அதிர்ஷ்டம் என்றால் லாட்டரிக்கு எப்போதும் முதலிடம் கொடுத்து வைத்திருக்கிறோம். அந்த வகையில் லக்னோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைபார்த்து வரும் நிலையில் ஏதேட்சையாக அவர் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். அந்த லாட்டரியில் அவருக்கு மாதம்தோறும் 25,000 டிஹம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.5,59,822) வீதம் அடுத்த 25 வருடங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதை அவருடைய வாழ்நாளில் ஈட்டவே முடியாத ஒரு விஷயமாகக் கருதி வருகிறார்.

லக்னோவை சேர்ந்த முகமது அடில் கான் என்பவர் சவுதி அரேபியாவில் வேலைப்பார்த்து வந்த நிலையில் கடந்த 2018 இல் துபாய்க்கு சென்றுள்ளார். அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் இன்டீரியர் டிசைனராகப் பணியாற்றி வருகிறார். கொரோனா நேரத்தில் தனது சகோதரதை இழந்த இவர் வயதான பெற்றோர் மற்றும் 5 வயது மகளுடன் வசித்துவரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆன்லைனில் எமிரேட்ஸின் ஃபாஸ்ட்5 டிரா டிக்கெட்டை பார்த்திருக்கிறார்.

இதையடுத்து முதல் முறையாக லாட்டரி டிக்கெட்டை வாங்கிய அவருக்கு கடந்த வியாழக்கிழமை பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக ரூ.5.5 லட்சத்தை வெல்லும் இவர் மாதம்தோறும் அடுத்த 25 வருடங்களுக்கு இதேபோன்று பணம் பெற இருக்கிறார். இதுகுறித்து பேசிய அடில் கான் முதலில் இதை நம்பவே இல்லை. இந்தப் பணத்தைக் கொண்டு முதற்கட்டமாக வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளேன். என்னுடைய கடினமான நேரத்தில் இந்த லாட்டரி கிடைத்திருக்கிறது என்று திருப்தி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மெகா டிரா டிக்கெட்டை அறிவித்த எமிரேட்ஸ்-இன் டைச்செரோஸ் நிறுவனம் கூறும்போது லாட்டரி வெல்பவர்கள் ஒரே நேரத்தில் பணத்தை செலவழிக்காமல் அவர்களை மல்டி மில்லியனர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி 25 வருடங்களுக்கு லாட்டரி அறிவிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறது.