டெல்லி பல்கலை மாணவிக்கு பதிலடி கொடுத்த சேவாக்
- IndiaGlitz, [Tuesday,February 28 2017]
கார்கில் போரில் உயிர்நீத்த தியாகியின் மகளான டெல்லி பல்கலைக்கழக மாணவி கூர்மேகம் கெளர் என்பவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை என்றும் தனது தந்தையை கார்கில் போர்தான் கொன்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் தேசியவாதம் என்ற பெயரில் பாஜகவின் மாணவர் அமைப்பின் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவியின் கருத்துக்கு பாரதிய ஜனதா தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வரவேற்றுள்ளன. மேலும் மாணவி கூர்மேகம் கெளர் அவர்களுக்கு கொலைமிரட்டல் வந்து கொண்டிருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மாணவியை கண்டித்து பலர் சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் கலந்த பதிவுகளை பதிவு செய்துள்ளனர். மாநில அளவில் ரேங்க் எடுத்த ஒரு மாணவி 'நான் தேர்வை எழுதவில்லை என்றும் எனது பேனாதான் தேர்வை எழுதியது என்றும் கூறியுள்ளார்.
அதேபோல் நட்சத்திர கிரிக்கெட் வீரர் வீரேந்திரசேவாக் தனது சமூக வலைத்தளத்தில் நான் இரண்டு முறை அடித்த முச்சதங்களை நான் அடிக்கவில்லை என்றும் எனது பேட் தான் அடித்தது என்றும் பதிலடி கொடுத்துள்ளார். இதேபோல் பலர் கருத்து தெரிவித்து வருவதால் சமூக வலைத்தளங்கள் பெரும் பரபரப்பில் உள்ளது.
இந்நிலையில் மாணவியின் மனதில் விஷத்தை தூவியது யார் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் விஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மூத்த தலைவர் பிரதாப் சின்ஹா, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமை மாணவியுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.