இந்திய இராணுவம் அறிவித்துள்ள புதிய இன்டெர்ன்ஷிப் "டூர் ஆஃப் டியூட்டி" பற்றி தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்த நாட்டுக் குடிமக்கள் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டும் என்கிற விதி இருக்கிறது. குறிப்பிட்ட நாட்கள் இராணுவத்தில் பணி புரிந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். இந்திய குடிமக்கள் அப்படி இராணுவத்தில் பணி புரிய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அப்படியே இராணுவத்தில் சேர்ந்தாலும் பெரும்பாலானவர்கள் அதைத் தங்கள் வாழ்நாள் பணியாக தொடருகின்றனர். ஏனென்றால் இராணுவத்தில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் பயிற்சி அவர்களை ஒரு நல்ல வீரராக மாற்றி விடுகிறது. நாட்டின் பாதுகாப்பு என்ற உணர்வோடு அவர்கள் ஒன்றிவிடவும் செய்கிறார்கள்.
இப்படி மெனக்கெடாமல் 3 ஆண்டுகள் மட்டும் இராணுவத்தில் இணைந்து பணியாற்றி விட்டு பின்னர் எந்த அடையாளமும் இல்லாமல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் விதமாக இந்திய இராணுவம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது. அத்திட்டத்திற்கு பெயர்தான் ”டூர் ஆஃப் டியூட்டி”. இதுவும் ஒரு இராணுவ பயிற்சிக்கான இன்டெர்ன்ஷிப் போலத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த பணியில் சேரும் இராணுவ வீரர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் கொடுக்கப்படும். ஆனால் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றவுடன் முன்னாள் இராணுவ வீரர் என்ற எந்த அடையாளமோ, ஓய்வூதியமோ, சலுகைகளோ எதுவும் வழங்கப்படாது. பணியில் இருந்து வெளியே வரும்போது குறிப்பிட்ட தொகையுடன் அவர்கள் வெளியே வருவார்கள். இப்படி 3 ஆண்டுகளுக்கு என்ற அடிப்படையில் இராணுவ வீரர்களை நியதித்தால் அதிக மனித வளத்தை பயன்படுத்த முடியும் என்று இந்திய இராணுவம் முடிவெடுத்து இருக்கிறது.
அதோடு 3 ஆண்டுகளுக்கு இந்திய குடிமக்களை இராணுவத்தில் நியமிப்பதன் மூலம் நாட்டுப்பற்றை வளர்க்க முடியும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இத்திட்டத்தால் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், சலுகைகள் போன்றவற்றிற்கான பணத்தை மிச்சம் பிடித்து ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள் வாங்கப் பயன்படுத்தலாம் எனவும் இந்திய இராணுவம் திட்டம் தீட்டியிருக்கிறது. இந்த திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகத் தற்போது சில வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
3 ஆண்டுகளுக்கு பணி அமர்த்தப்படும் இராணுவீரர்களுக்கு முறையாகப் பயிற்சி வழங்க வேண்டும். அப்படி பயிற்சி கொடுக்கப்பட்டாலும் அவர்களை பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பணிக்கு அமர்த்த முடியும். எல்லைப் பாதுகாப்பு போன்ற தீவிர வேலைகளில் அமர்த்த முடியாது. இராணுவப் பணியானது ஒற்றுமை உணர்வோடும் கூட்டு அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படும் ஒரு அமைப்பு. இதில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து போகும் வீரர்களால் இராணுவக் குழுக்களிடையே பிடிப்பு இருக்காது என்றும் கருதப்படுகிறது. இத்திட்டம் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கு உதவும் எனக் கருதப்பட்டாலும் எந்தப் பணிப் பாதுகாப்பையும் இது ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும் இராணுவத்தில் சேர்ந்து வேலை பார்த்து விடலாம் எனக் கருதும் திறமை சாலிகளுக்கு இத்திட்டம் நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்திய இராணுவம் சொல்கிற மாதிரி நாட்டுப்பற்றை வளர்க்கவும் மனித வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒருவேளை இந்தத் திட்டம் கைக் கொடுக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout