எல்லையில் கத்திக் கம்புகளுடன் நிற்கும் சீன இராணுவ வீரர்கள்!!! கதிகலங்க வைக்கும் பின்னணி!!!
- IndiaGlitz, [Wednesday,September 09 2020]
கடந்த சில தினங்களுக்கு கிழக்கு லடாக் பகுதியில் சீன இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்தியா கடும் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் சீன இராணுவ வீரர்கள் சிலர் தங்களது துப்பாக்கிகளைத் தரையைநோக்கி வைத்து விட்டு கைகளில் கத்தி, கம்புகளுடன் நிற்பதைப் போன்ற ஒரு புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது போன்ற பல்வேறு தகவல்களைக் குறித்து இந்திய இராணுவத்தின் உயர்மட்டம் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறது.
இந்நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் சீன இராணுவ வீரர்கள் இருந்த நிலையில் இந்தப் புகைப்படம் எடுக்கப் பட்டது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தப் புகைப்படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கியை ஏந்திவந்த சீன இராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டு பகுதியை நோக்கி வந்ததாகவும் அதையடுத்து இந்திய இராணுவம் அவர்களை கடுமையாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்திய இராணுவம் எச்சரித்த நிலையில் சீன இராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியை நோக்கி வராமல் நின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை இந்த குழுவினர்தான் நடத்தினரா என்பதை குறித்து எந்த விளக்கமும் வெளியாக வில்லை. இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் வெளியான பிறகே சீன இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்தியா குற்றம் சாட்டியிருந்தது.
இச்சம்பவத்தை குறித்து, சீன வெளயுறவுத்துறை அமைச்சகம் இந்திய இராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தாண்டிவந்து சீன இராணுவத்தை எச்சரித்ததாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குற்றம் சாட்டியது. சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த இந்திய இராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் எந்தவொரு கட்டத்திலும் இந்திய இராணுவம் அத்துமீறவோ துப்பாக்கி பிரயோகம் செய்யவோ இல்லை. மேலும் இருநாடுகளும் மேற்கொண்டு இருக்கும் பரஸ்பர ஒப்பந்தங்களை சீன இராணுவம்மீறி முரட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டது என்றும் தெளிவுப்படுத்தி இருக்கிறது.
இச்சம்பவத்தால் இந்திய-சீன எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் எச்சரிக்கை செய்வதற்காகக் கூட இதுவரை இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது இல்லை. பல நூற்றாண்டுகளாக இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. ஆனால் சீனா விதிமுறைகளை மீறி கடந்த சில தினங்களாக ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் தலையீடுகளாலும் இதைச் சரிப்படுத்த முடியவில்லை என்று இந்திய இராணுவத்தின் உயர்மட்டம் கவலைத் தெரிவித்துள்ளது.