அசர வைக்கும் காரணம்… டைம் இதழின் 2020 ஹீரோக்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய அமெரிக்கர்!!!

  • IndiaGlitz, [Saturday,December 12 2020]

 

அமெரிக்காவின் மிக பிரபலமான பத்திரிக்கை டைம் இதழ். இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்களை தேர்வு செய்து அட்டைப் படத்தை நேற்று வெளியிட்டது. அந்த அட்டைப் படத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அமெரிக்காவின் அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் இடம் பிடித்து இருந்தனர். இந்நிலையில் டைம் இதழ் தேர்வு செய்து இருக்கும் 2020 ஹீரோக்கள் பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர் ஒருவர் இடம் பிடித்து இருக்கிறார். அதிலும் அவர் செய்த காரியம் பல தரப்புகளில் இருந்து பாராட்டை பெற்றிருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (46) எனும் கறுப்பின இளைஞர் போலீஸ் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும் கறுப்பினத்தவருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி கடந்த ஜுன் 1 ஆம் தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிக்கைக்கு அருகே போராட்டக்காரர்கள் பலர் ஒன்று கூடி முழக்கங்களை எழுப்பி வந்தனர். அந்தப் போராட்டத்தைக் கலைக்கும் பொருட்டு அந்நாட்டு காவல் துறை போராட்டக் காரர்கள் மீது தடியடி நடத்தியும் மிளகு பொடியை தூவியும் தாக்குதல் நடத்தியது.

அதோடு ஒரு சில நிமிடங்களில் அந்த சாலை முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்நேரத்தில் வெளியில் நிற்கும் அனைவரும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு கைது நடவடிக்கையும் தொடர்ந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் போராட்டக் குழுவில் இருந்த 70 க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களுக்குப் பேரூதவி செய்து இருக்கிறார் ஒரு இந்தியர்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் துபே எனும் நபர் வாஷிங்கடனில் வசித்து வருகிறார். திடீரென்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போராட்டக்காரர் மீது போலீஸ் நடத்தும் தடியடியை பார்த்த ராகுல் துபே தனது வீட்டுக் கதவை திறந்து அனைவரும் உள்ளே வாருங்கள் எனக் கூக்குரல் இட்டார். இதனால் 70 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி அன்று இரவு முழுவதும் பாதுகாப்பாக இருந்தனர். இந்நிலையில் காலையில் அந்த வீட்டை விட்டு வெளியேறிய போராட்டக்காரர்கள் அனைவரும் ராகுல் துபேவிற்கு உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்து வெளியேறினர்.

மேலும் சமூக வலைத்தளத்தில் ராகுல் துபேவின் புகைப்படத்தை பகிர்ந்து பலரும் பாராட்டு மழையில் நனைத்தனர். இதனால் பிரபலமான ராகுல் துபேவை குறித்த டைம் இதழ் சிறு குறிப்புகளை வெளியிட்டதோடு 2020 ஆண்டிற்கான சிறந்த ஹீரோ பட்டியலில் பெயரையும் வெளியிட்டு இருக்கிறது. போராட்டக் குழுவிற்கு உதவி செய்த ராகுல் துபே இந்தியாவிலும் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.