கொரோனாவுக்கு பயந்து 3 மாதமா விமான நிலையத்தில் பதுங்கிய விசித்திர மனிதன்!
- IndiaGlitz, [Tuesday,January 19 2021]
கொரோனாவுக்கு பயந்து மனிதர்கள் சில நேரங்களில் பல விசித்திரமான நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சிகாகோ நகரில் உள்ள விமான நிலையத்தில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கடந்த 3 மாதமாக பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. அவர் தற்போது தடை செய்யப்பட்ட பகுதியில் தங்கி இருந்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிகாகோ நகரில் உள்ள ஓஹேர் சர்வதேச விமான நிலையத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா சிங் (36) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வந்துள்ளார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருபவர். இந்நிலையில் சிகாகோ விமான நிலையத்திற்கு வந்த ஆதித்யா கொரோனா பரவலுக்கு பயந்து அந்த விமான நிலையத்திலேயே தங்க முடிவு செய்துள்ளார். அங்கு சக பயணிகளுக்கு வழங்கப்படும் உணவை பெற்று சாப்பிட்டு வந்த ஆதித்யா அங்குள்ள ஊழியர்களின் கண்ணில் மண்ணைத் தூவி நாட்களைக் கடத்தி வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகாகோ விமான நிலையத்தில் பொது மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து ஊழியர்களும் சென்றுவிட்ட நிலையில் இவர் மட்டும் தனியாக இருந்ததைப் பார்த்து போலீசார் விசாரித்து உள்ளனர். அந்த விசாரணையில் ஆதித்யா தான் விமான நிலைய ஊழியர் எனப் பதில் அளித்து ஒரு அடையாள அட்டையையும் காட்டி இருக்கிறார். ஆனால் அந்த அடையாள அட்டை கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு ஊழியரிடம் இருந்து காணாமல் போனது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட இடத்தில் பதுங்கி இருந்த குற்றத்திற்காக ஆதித்யா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.