அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு வெளிநாட்டுக்கு பறக்கும் 'இந்தியன் 2' குழு.. எந்த நாடு தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,February 04 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக திருப்பதி அருகே உள்ள அடர்ந்த காடுகளில் கமல்ஹாசனின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாகவும் இதற்காக கமல்ஹாசனுக்காக ஹெலிகாப்டர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது திருப்பதி படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் 15 நாட்கள் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இதற்காக சென்னையில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு படக்குழுவினர் விரைவில் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ’இந்தியன் 2’ படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு தீபாவளி தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சுதீப், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.