'இந்தியன் 2' விபத்து: 6 பேர்களிடம் வாக்குமூலம் வாங்கிய சென்னை காவல்துறை
- IndiaGlitz, [Tuesday,February 25 2020]
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படிப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து 6 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
கடந்த 19-ம் தேதி, சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்த போது திடீரென கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தால் தமிழ்சினிமா உலகினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக லைக்கா நிறுவனம், கிரேன் ஆபரேட்டர் ராஜன், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் ஆகியோர் மீது ஷங்கரின் உதவியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவருடைய தலைமையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் படப்பிடிப்பின் போது பணிபுரிந்த 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இந்த விசாரணையில் அரங்கு அமைத்த மேலாளர், கிரேன் ஊழியர்கள் உள்பட 6 பேரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது