'இந்தியன் 2' விபத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Sunday,February 23 2020]
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து கொண்டிருந்தபோது ராட்சத கிரேன் ஒன்று அறுந்து கீழே விழுந்து ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 7 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்கள் தற்போது குணமாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியது.
இந்த நிலையில் இந்த விபத்தில் பலியான மூவருக்கும் கமலஹாசன் ரூபாய் ஒரு கோடியும் லைக்கா நிறுவனம் ரூபாய் 2 கோடி நிதியுதவி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கமலஹாசன் ஷங்கர் உள்பட பலருக்கும் சம்மன் அனுப்பிய போலீசார் விசாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீது விசாரணை செய்த அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதி கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து அவர் இன்று மாலை அல்லது நாளை சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.