முதல் முறையாக ரோஹித், டிராவிட் கூட்டணி… நியூசிலாந்துடன் மோதும் இந்தியா!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிவரை சென்று தோல்வியைத் தழுவியது. இதனால் இந்திய ரசிகர்கள் கூட ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிக்கொண்ட தொடருக்காக நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளார். மேலும் விராட் கோலி, ரவிசாஸ்திரி விலகலுக்குப் பிறகு ரோஹித், டிராவிட் கூட்டணியில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் இந்தப் போட்டிக்கு பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரின்போது விராட் கோலி, ஷமி, பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த முதன்மை ஆட்டக்காரர்கள் பலருக்கு இந்தத் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், அவேஷ்கான் போன்றோர் அணியில் இணைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பின்பு நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சிறிது ஓய்வெடுக்க விரும்பியதால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து நியூசிலாந்து அணியை டிம் சவுதி வழிநடத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது.