நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா: இஸ்ரோவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,August 23 2023]

நிலவின் தென் துருவதற்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் சந்திராயன் 3 என்ற விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி சரியாக நிலவில் தரை இறங்கியது. நிலவிலிருந்து 700 மீட்டர் தூரம் இருக்கும் போதே தரையிறங்கும் இடத்தை உறுதி செய்து புகைப்படம் எடுத்து அனுப்பிய விக்ரம் லேண்டர், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலவை நெருங்கியது.

விக்ரம் லேண்டர் 100 மீட்டர் தூரம் இருக்கும் போது மீண்டும் தரையிறங்கும் இடத்தை உறுதி செய்தது . இதனை அடுத்து சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

இதனை தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று இந்தியா நிலவில் உள்ளது என்றும், இந்திய விஞ்ஞானிகளின் சாதனை மிகப்பெரியது என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மக்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர் என்றும் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா என்ற பெருமையும் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.