கொரோனா ஏற்படுத்திய தாக்கம்: அட்டைப்பெட்டி படுக்கைகளால் நிரம்பி வழியும் இந்தியா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா உலகளவில் கொரோனா வரிச்சைப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவு எனக் கருதப்பட்டாலும் தற்போது ஒரு புது நெருக்கடிக்குள் இந்தியா மாட்டிக்கொண்டு இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மனைகளில் இடம் இல்லை என்ற தகவல் வெளியாகி இருந்தது. இதனால் மத்திய அரசு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைநகருக்கு தற்காலிக மருத்துவ மனைகள் உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப் பட்டு இருந்தது. தற்காலிக மருத்துவ மனைகளை உருவாக்க 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது. தற்போது ரயில் பெட்டிகளை மருத்துவ மனைகளாக மாற்றும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியானது.
தலைநகரைப் போலவே மும்பையில் மருத்துவ மனை படுக்கை கிடைக்காமல் ஒரு கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. மும்பையில் தற்போது சில தற்காலிக மருத்துவ மனைகள் உருவாக்கப் பட்டு இருக்கின்றன. இந்தியாவில் உருவாக்கப் பட்டு வரும் தற்காலிக மருத்துவ மனைகளுக்காக படுக்கைகள் தயாரிக்கப் படும் பணியும் இன்னொரு பக்கம் விரைவாக நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு ஆன்மீக வளாகத்தில் தற்போது அம்மாநில அரசு 10 ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த மருத்துவ மனைகளில் அட்டைப் பெட்டிகளால் (Card board) ஆன படுக்கைகளே பயன்படுத்தப் பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படுக்கைகளை 300 கிலோ எடை கொண்ட நபர் மிக எளிதாகப் பயன்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது. இரும்பு மற்றும் மரத்தால் செய்யப்பட்ட படுக்கைகளில் கொரோனா வைரஸ் 3 நாட்கள் வரையிலும் உயிர்ழவாழும் தன்மையுடையது. ஆனால் அட்டைப் பெட்டிகளிலும் வெறுமனே 24 மணி நேரத்தில் வைரஸ்கள் அழிந்துவிடும். மேலும் எளிதாக எடுத்துச் செல்லவும் இடமாற்றம் செய்யவும் இந்த வகை படுக்கைகள் வசதியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் மற்ற படுக்கைகளை விட அட்டைப் பெட்டிகளைக் கொண்டு செய்வதால் செலவு மிகவும் குறைவாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியிருக்கிறது. உயிரிழப்பு 15 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. இந்நிலையில் சில விஞ்ஞானிகள் இந்தியாவில் இரண்டாவது அலை வீசும் எனவும் கோடை காலத்தில் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் பயமுறுத்தி வருகிறார்கள். இத்தகைய செய்தியைப் பார்க்கும் போது இந்தியா முழுக்கவே அட்டைப் பெட்டிகளாக மாறுமோ என்ற அச்சமும் ஏற்படத்தான் செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments